கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள வனப்பகுதியை ஒட்டிய விளைநிலத்தில் காட்டுயானை உயிரிழந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் மாநில எல்லையான தளி வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. இவற்றில் இரண்டு யானைகள் ஊடே துர்கம் வனப்பகுதியில் சுற்றித் திரிந்துள்ளன. இதில் ஒரு ஆண் யானை கவிபுரம் கிராமத்தின் அருகே விளைநிலங்களுக்குள் உணவு தேடிச் சென்றுள்ளது. பின்னர் வனத்திற்கு திரும்பும் வழியில் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளது.
தகவலறிந்து வந்த ராயக்கோட்டை வனத்துறையினர், 35 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் யானையின் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காட்டுயானையின் உடலை அங்கேயே கூராய்வு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.