டிரெண்டிங்

அரசியலில் ராகுல் நர்சரி மாணவர் ஆனால் அமித்ஷா பி.ஹெச்டி முடித்தவர்: பிஸ்வா சர்மா

rajakannan

அரசியலில் ராகுல் காந்தி ஒரு நர்சரி மாணவர் என்று ஹிமந்த பிஸ்வா சர்மா கூறியுள்ளார். 

வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் ஹிமந்த பிஸ்வா சர்மா. காங்கிரஸ் கட்சியில் 23 ஆண்டுகள் இருந்த அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா சட்டசபை தேர்தல்களில் பாஜக சார்பில் முக்கிய பொறுப்பாளராக பணியாற்றியவர் பிஸ்வா. முக்கியமாக மேகாலயாவில் காங்கிரஸ் கட்சியின் பக்கம் இருந்த சூழலை, தனது அரசியல் சாதுர்யத்தின் மூலம் பாஜக கூட்டணி பக்கம் திருப்பி ஆட்சி அமைக்க வைத்தவர்.

இந்நிலையில்,  தனியார் பத்திரிகைக்கு ஹிமந்த பிஸ்வா சர்மா அளித்த பேட்டியில், காங்கிரஸ் கட்சி குறித்தும் ராகுல் காந்தி குறித்தும் பல்வேறு விமர்சனங்களை நேரடியாக முன் வைத்துள்ளார்.

பிஸ்வாவின் அந்தப் பேட்டியில், “ராகுல் காந்தி கிட்டத்தட்ட 50 வயதை எட்டியிருந்தாலும், அவர் இந்தியாவைப் பற்றியும், அதன் மதிப்பீடுகள் பற்றியும் இன்னும் கற்க வேண்டியுள்ளது. பழிவாங்கும் அரசியலை அல்ல, நாட்டிற்கு சேவை செய்ய வேண்டியவற்றை கற்ற வேண்டும். ராகுல் காந்தி அரசியலில் ஒரு நர்சரி மாணவர். ஆனால், அமித்ஷாவோ பி.ஹெச்டி முடித்தவர். 

ராகுல், சோனியாவை தவிர மற்ற காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கும் பொழுதெல்லாம், அவர்களை பாஜகவில் சேரும்படி கேட்டுக்கொள்வேன். நான் காங்கிரஸ் கட்சியில் 23 ஆண்டுகளை வீணடித்துவிட்டேன். 23 ஆண்டுகள் காங்கிரஸில் இருந்தாலும் முக்கிய தலைவர் என்ற இடத்திற்கு என்னால் போகமுடியவில்லை. ஆனால், பாஜவின் அணுகுமுறை வித்தியாசமானது. பாஜகவில் தலைவன்-தொண்டர் என்ற பாகுபாடு கிடையாது. யார் வேண்டுமென்றாலும் அமித்ஷாவை சந்திக்கலாம். அவருடன் தேநீர் அருந்தலாம்” என்று கூறினார்.

சோனியா காந்தியையும் அவர் நேரடியாக விமர்சித்தார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, ‘மோடியை பிரதமர் ஆவதற்கு அனுமதிக்க மாட்டேன்’ என்று கூறியதை சுட்டிக்காட்டிய பிஸ்வா, ‘சோனியா காந்தியின் நிலப்பிரபுத்துவ மனநிலையை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்’ என்று தெரிவித்தார்.