டிரெண்டிங்

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

webteam

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பிரச்சாரங்களில் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக பேச தடை கோரிய வழக்கில் ஸ்டாலினுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக திமுகவின் பொள்ளாச்சி வேட்பாளர் சண்முகசுந்தரத்தை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். கோவை தொண்டாமுத்தூர் அருகே அவர் வாகனத்தில் பிரச்சாரம் செய்த போது, அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

அத்துடன் பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட பார் நாகராஜுக்கும், அமைச்சர் வேலுமணிக்கு பல்வேறு தொடர்புகள் இருப்பதாகவும், குற்றவாளிகளை அவர் தப்பிக்க வைக்க முயலுவதாகவும் ஸ்டாலின் பேசியிருந்தார். மேலும் உள்ளாட்சி துறையில் பல மோசடிகளை வேலுமணி செய்துள்ளதாகவும், உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு தயாராக இல்லை எனவும் குற்றம்சாட்டியிருந்தார்.

இதனையடுத்து இவ்வாறு ஸ்டாலின் பேசியது உண்மைக்கு புறம்பானவை எனவும், தேர்தல் நேரத்தில் இப்படி பேசுவது விதிமுறை மீறல் எனவும் அமைச்சர் வேலுமணி உயர் நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தார். மேலும் ஸ்டாலின் பேச தடை கோரியும், ஒரு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு வழங்க உத்தரவிடக் கோரியும் அமைச்சர் வேலுமணி மனு தாக்கல் செய்தார். 

இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் தேர்தல் நேரத்தில் பிரச்சாரங்களில் இரு தரப்பினரும் பரஸ்பரம் குற்றம் சாட்டுவது வாடிக்கை தான். எனவே ஸ்டாலினுக்கு தடை விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்தார். மேலும் உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி கோரிக்கை நிராகரித்து, வரும் 16-ஆம் தேதிக்குள் பதிலளிக்க ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.