அடுத்த மாதம் 31-ஆம் தேதிக்குள் தமிழக உள்ளாட்சித் தேர்தலை நடத்துமாறு மாநில தேர்தல் ஆணையத்தை சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
உள்ளாட்சிகளில் சிறப்பு அதிகாரிகளின் பதவி காலத்தை நீட்டிக்க கூடாது என மாற்றம் ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு மாத காலத்தில் தேர்தலை நடத்துவது சாத்தியமல்ல என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வருகிற 26-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை தாக்கல் செய்யுங்கள் என்று கூறினர். ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் தேர்தல் தேதியை அறிவிக்குமாறும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
முன்னதாக, தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் தேர்தல் நடத்துவதாக இருந்தது. இது தொடர்பாக அறிவிப்பும் வெளியிடப்பட்டது. ஆனால், பழங்குடியினருக்கு போதிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணைய அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.