டிரெண்டிங்

துளிர்க்கும் நம்பிக்கை: உணவின்றி தவித்த தொழிலாளிக்கு கிடைத்த உதவி

webteam

புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கை நிகழ்ச்சி மூலம் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த ஏழைத் தொழிலாளியின் குடும்பத்திற்கு உதவி கிடைத்துள்ளது.

கூலி வேலை செய்து வந்த தாமஸ் பாண்டியன் என்பவரின் குடும்பம் ஊரடங்கு காலத்தில் உணவின்றி தவித்துவருவதாக புதிய தலைமுறையில் செய்தி வெளியானது. இதனையடுத்து திமுகவை சேர்ந்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை அமைப்பாளர் பாலமுருகன் என்பவரின் சார்பில் அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தாமஸ் பாண்டியன் குடும்பத்திற்கு வழங்கப்பட்டது. துளிர்க்கும் நம்பிக்கை நிகழ்ச்சி மூலம் உதவி கிடைத்ததை அடுத்து, தாமஸ் பாண்டியன் குடும்பத்தினர் புதிய தலைமுறைக்கு நன்றி தெரிவித்தனர்.

உடல்நலம் பாதிப்பு, வறுமை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள நான்கு குடும்பத்தினர் நல் உள்ளங்களின் ஆதரவை எதிர்நோக்கி உள்ளனர். சென்னை நெசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மோகனா என்ற மாற்றுத்திறனாளி, மனவளர்ச்சி குன்றிய சகோதரி, யானைக்கால் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் சகோதரர் உள்ளிட்டோருடன் கடும் வறுமையில் வாடி வருகிறார். இதேபோல் சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், ஒரு கை செயலிழந்துவிட்டதால் வீ்ட்டிலேயே இருந்து வருகிறார். வீட்டு வேலை பார்க்கும் அவரது மனைவியின் மிகச்சொற்ப வருமானம் போதாததால் கவலையில் ஆழ்ந்துள்ளார். சென்னை வள்ளலார் நகர் பகுதியில் வசிக்கும் மூட்டை தூக்கும் தொழிலாளியான அன்சார், ஊரடங்கால் வேலையின்றி வயதான பெற்றோருடன் இன்னல் அனுபவித்து வருகிறார்.

இவர்களைப் போன்றே, சென்னை மந்தைவெளிப்பாக்கத்தில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநரான ராஜூ, கொரோனாவால் பாதிக்கப்பட்டு இரத்த ஓட்டம் இல்லாததால் கால்கள் துண்டிக்கப்பட்டு மிகுந்த வேதனைக்கு ஆளாகி உள்ளார். இவர்கள் அனைவரும் தங்களுக்கு உதவிட நல்ல உள்ளம் படைத்த யாரேனும் முன்வர மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

> புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு நூற்றுக்கணக்கான அழைப்புகள் உதவிகள் கோரி வந்துகொண்டிருக்கின்றன. எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள். கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள். உதவி நாடுவோருக்கு தங்களால் இயன்றதை தொடர்ந்து செய்துவரும் நல் உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும்.