டிரெண்டிங்

"கொரோனாவை எதிர்க்க ஹோம் மேட் சாக்லேட்”- விளம்பரப்படுத்தி விற்பனை செய்த நிறுவனத்திற்கு சீல்

webteam

உதகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்ற விளம்பரத்துடன் புதிய வகை ஹோம் மேட் சாக்லேட் உற்பத்தி செய்த பிரபல நிறுவனத்திற்கு சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சீல்வைத்தனர்.

ஹோம் மேட் சாக்லேட்க்கு பெயர்போன உதகை. இங்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களை கவரும் வகையில் பல வண்ண விதமான சுவையிலும், வடிவிலும் சாக்லேட்டுகள் தயாரிக்கப்பட்டு வந்தன. இவற்றை சுற்றுலா பயணிகள் விரும்பி வாங்கி செல்வார்கள்.

இதனைத்தொடர்ந்து கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் வருகை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் ஹோம் மேட் சாக்லேட் தொழில் கடும் சரிவை சந்தித்தது. இதையடுத்து வழக்கமாக தயாரிக்கப்படும் ஹோம்மேட் சாக்லேட்க்கு பதிலாக சில மூலிகைகளை கலந்து சாக்லேட் செய்ய வியாபாரிகள் தொடங்கினர். அந்த வகையில் பிரபல நிறுவனம் ஒன்று கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் புதிய ரக ஹோம் மேட் சாக்லேட் எனக்கூறி விற்பனை செய்து வந்தது.

கூடலூரில் உற்பத்தி செய்யப்படும் கொக்கோ மூலம் வெள்ளை சக்கரைக்கு பதிலாக நாட்டுச்சக்கரை கலந்து எந்த வித ரசாயன கலவையில் சேர்க்காமல் ஹோம் மேட் சாக்லேட் தயாரிக்கப்பட்டதாக நிறுவனத் தரப்பு கூறுகிறது. மேலும், இவ்வகை ஹோம் மேட் சாக்லேட்களில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கொக்கோ அதிகளவு இருப்பதாக பாக்கெட்களின் மேல் பகுதியில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இந்த நிறுவனத்தில் திடீர் ஆய்வு செய்தனர். இதில் அரசிடம் இருந்து எந்த விதமான அனுமதியும் பெறாமல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் நிறைந்த சாக்லெட் என்று விளம்பரப்படுத்தி விற்பனை செய்ததால் இந்த தொழிற்சாலைக்கு சீல் வைத்தனர்.