மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்து பாஜக வெற்றி பெற்றுள்ளதாக பட்டிதார் அமைப்பின் தலைவர் ஹர்திக் படேல் குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹர்திக், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும். சூரத், ராஜ்கோட், அகமதாபாத் உள்ளிட்ட இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. சந்தேகமும், கேள்விகளும் எழாமல் இருப்பதற்காகவே காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் வழங்கியுள்ளது.
காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததற்கு இதுதான் முக்கிய காரணம். தற்போது பாஜகவுக்கு 100-க்கும் குறைவான இடங்கள் கிடைத்ததே மகிழ்ச்சி எங்களுக்கு வெற்றிதான். பட்டிதார் சமுதாயத்திற்கான போராட்டங்களை தொடர்ந்து மேற்கொள்வேன். எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” என்றார்.
தேர்தல் பிரச்சாரங்களின் போது பாஜகவுக்கு மிகவும் நெருக்கடி கொடுத்து வந்தவர் ஹர்திக் படேல். பல்வேறு மாவட்டங்களில் சூறாவளிப் பயணம் மேற்கொண்டு பாஜகவுக்கு எதிராக கடும் பிரச்சாரம் மேற்கொண்டார்.