மதுரையில் வீட்டை காலி செய்ய சொல்லி உரிமையாளர் மிரட்டுவதாக மாற்றுத்திறனாளி ஒருவர் தனது குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார்.
மதுரை சாந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளியான ராஜா. மாதம் 5,000 ரூபாய் வாடகையில் தனது மனைவி மற்றும் 6 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் வெல்டிங் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக வேலை இழந்து தவிக்கும் இவரால் கடந்த 2 மாதமாக வீட்டு வாடகை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் வீட்டின் வாடகையை கொடுக்கவில்லை என்றால் காலி செய்யும்படி வீட்டின் உரிமையாளர் கூறியுள்ளார். இதனால் தனது மனைவி மற்றும் 5 பிள்ளைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளியான ராஜா நீதி கேட்டு தஞ்சம் அடைந்தார்.
மாவட்ட ஆட்சித் தலைவரின் கவனத்திற்கு புதிய தலைமுறை கொண்டு சென்றதன் காரணமாக ஆட்சியரின் உத்தரவின் பேரில் வீட்டின் உரிமையாளரிடம் வடக்கு வட்டாட்சியர் சுரேஷ் பேசி, வீட்டின் வாடகைக்கு நோய்களின் தாக்கம் முடிவடையும் வரை அவகாசம் வழங்க அனுமதி பெற்று கொடுத்துள்ளார். மேலும், அவருடன் சென்ற வருவாய்த்துறையினர் வீட்டின் உரிமையாளரிடம் எழுத்துப்பூர்வமாக அவர்களை வீட்டை காலி செய்ய மாட்டேன் என்பது குறித்து கடிதமும் எழுதி வாங்கியுள்ளனர்.