கமல் தீவிரவாதிகள் ஆதரவாளராக முன்னேறி உள்ளார் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஹெச்.ராஜா கருத்திட்டு உள்ளார்.
பிரபல தமிழ் வார இதழில் கமல் எழுதி வரும் தொடர் கட்டுரையில், முன்பெல்லாம் இந்து வலதுசாரியினர் மற்ற மதத்தைச் சார்ந்தவர்களுடன் வன்முறையில் ஈடுபடாமல், வாதப் பிரதிவாதங்கள் மூலமே எதிராளியை வன்முறையில் ஈடுபட வைத்தனர். ஆனால், இந்த பழைய சூழ்ச்சி தோற்க ஆரம்பித்ததும், யுக்தியால் முடியாததை சக்தியால் செய்யத் தொடங்கிவிட்டடனர் என்று கூறியிருந்தார். இந்நிலையில் கமல்ஹாசன் கருத்து குறித்து உத்தரப்பிரதேசம் வாரணாசியில் உள்ள பனாரஸ் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, “கமல் எப்போதுமே இந்து விரோதி என்ற நிலை மாறி தீவிரவாதிகள் ஆதரவாளர் என்ற நிலைக்கு முன்னேறி உள்ளார். தேசபக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும். விஸ்வரூபம் பட பிரச்சினையின் போது முஸ்லிம் அமைப்புக்கள் 20 வருடங்களுக்கு கமலின் பயம் போகாது என்றது சரிதான் போல. இந்துக்கள் மீது தாக்குதல் வெட்கம்” என்று பதிவிட்டுள்ளார்.