டிரெண்டிங்

போட்டோ போட்டு சத்யராஜை மறைமுகமாக நக்கலடித்த ஹெச்.ராஜா

போட்டோ போட்டு சத்யராஜை மறைமுகமாக நக்கலடித்த ஹெச்.ராஜா

Rasus

ராணுவமே வந்தாலும் அஞ்சமாட்டோம் என தெரிவித்திருந்த நடிகர் சத்யராஜை மறைமுகமாக நக்கல் செய்து பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதேபோல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கடந்த 7-ம் தேதி போராட்டம் நடைபெற்றது. அப்போராட்டத்தில் ரஜினி, கமல், விஜய், சத்யராஜ் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின்போது பேசிய நடிகர் சத்யராஜ், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். காவிரி வேண்டும். எந்த அரசுக்கும் பயப்படமாட்டோம். ராணுவமே வந்தாலும் அஞ்சமாட்டோம். குரல்கொடுக்கத் தைரியம் உள்ளவர்கள் தமிழர்களின் பின்னால் நில்லுங்கள்; இல்லையேல், ஒளிந்துகொள்ளுங்கள் ” என ஆவேசமாக பேசினார்.

ராணுவமே வந்தாலும் அஞ்சமாட்டோம் என தெரிவித்திருந்த நடிகர் சத்யராஜை மறைமுகமாக நக்கல் செய்து பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ட்விட்டரில் இன்று பதிவிட்டுள்ளார். அதில், “இராணுவத்தை எதிர்கொள்ள தயங்காத கூட்டம்” என்ற கேப்சனோடு புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். புகைப்படத்தில் கறுப்புச் சட்டை அணிந்த போராட்டக்காரர் இருவர், தனது கைகளை கூப்பியப்படி போலீசாரிடம் மன்னிப்பு கேட்பது போல் உள்ளது. இப்படி மன்னிப்பு கேட்பவர்கள்தான் ராணுவமே வந்தாலும் அஞ்சமாட்டார்களா..? என்ற கோணத்தில் ஹெச்.ராஜா மறைமுகமாக சாடியுள்ளார்.

மற்றொரு பதிவில், “சீருடையில் இருந்த காவலர்களை போராட்டக்காரர்கள் தாக்கியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது இவர்களுடைய தலைமையின் பண்பற்ற தன்மையை எடுத்துக்காட்டுகிறது.” எனவும் தெரிவித்துள்ளார்.