கருணை இல்லத்தில் 1590 கொலைகளை செய்துள்ள பாதிரி தாமஸை கைது செய்ய துப்புகெட்ட காவல்துறை, இந்த மோசடியை உலகிற்கு வெளிப்படுத்திய 3 மதிமுக சகோதரர்களை ரிமாண்ட் செய்துள்ளது கண்டிக்கத்தக்கது என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஷ்வரம் பகுதியில் செயிண்ட் ஜோசப் என்ற ஆதரவற்றோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. கடந்த சில காலமாக இந்த ஆதரவற்றோர் இல்லத்தின் மீது பல்வேறு புகார்கள் முன்வைக்கப்பட்டன. இந்த இல்லத்தில் மாதத்திற்கு 40 முதல் 50 போ் வரை உயிரிழப்பதாகவும் புகார்கள் எழுந்தன. மேலும் இங்கு ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் பிச்சைக்காரர்களை அழைத்து வந்து, அரசின் உரிய உத்தரவின்றி கருணைக் கொலை செய்வதாகவும் புகார் எழுந்தது. அத்துடன் மனித உடல்களும், எலும்புகளும் விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. மனித எலும்புகள் பணத்திற்காக கடத்தப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு விஸ்வரூபமெடுத்த நிலையில், 6 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் இதுவரை அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.
தற்போது இந்த இல்லத்தில் மொத்தமாக 350-க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். அவர்களில் நிறையபேர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள். மற்றவர்களோ ஆதரவற்றவர்கள். இதனிடையே தாங்கள் விருப்பமில்லாமல் இந்த இல்லத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள சிலர் வேதனையுடன் தெரிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ செயிண்ட் ஜோசப் கருணை இல்லத்தில் 1590 கொலைகள் செய்துள்ள பாதிரி தாமஸை கைது செய்ய துப்புகெட்ட காவல்துறை இந்த மோசடியை உலகிற்கு வெளிப்படுத்திய 3 மதிமுக சகோதரர்களை ரிமாண்ட் செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. காவல்துறை டிஜிபி, காஞ்சி மாவட்ட எஸ்.பி.க்கும் எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.