குட்கா போதைப்பொருள் முறைகேட்டில் ஆதாரங்களை அழிக்க அதிமுக அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை கண்ணம்பாளையத்தில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை கண்டுபிடித்த விவகாரத்தில் வெளிப்படையான சோதனை நடத்த வேண்டும் என திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ள காவல்துறைக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் குட்கா ஊழலில் சிக்கி கொண்டுள்ள அமைச்சரை காப்பாற்றுவதோடு தன்னை தானே காப்பாற்றி கொள்ள டிஜிபி இவ்வாறு செயல்படுவதாக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
குட்கா வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் ஈரம் காய்வதற்குள்,இது போன்ற நடவடிக்கையை காவல்துறை எடுத்திருப்பது நீதிமன்ற அவமதிப்பு என்றும், சிபிஐ விசாரணைக்கான ஆதாரங்களையும் தடயங்களையும் அழிக்கும் முயற்சி என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இது போன்று வழக்கு விசாரணையை முடக்க சூழ்ச்சி செய்வார்கள் என்பதால் தான் தீர்ப்பு வெளிவந்த உடன், டிஜிபியும் , சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் பதவி விலக வேண்டும் என தான் வலியுறுத்தியதாக ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். அறவழியில் போராட்டம் நடத்திய திமுகவினர் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், டிஜிபி ராஜேந்திரன், அமைச்சர் விஜயபாஸ்கரை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.