டிரெண்டிங்

குஜராத் மக்கள் பாஜகவை தோற்கடிக்க முடிவெடுத்துவிட்டனர்: ஜிக்னேஷ் மேவானி

webteam

குஜராத்தில் நடைபெற்று வரும் தேர்தலில் மக்கள் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க முடிவெடுத்து விட்டதாக, தலித் அதிகார் மஞ்ச் அமைப்பின் தலைவரும், சுயேட்சை வேட்பாளராக களமிறங்கி இருப்பவருமான ஜிக்னேஷ் மேவானி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று பரப்பரப்பாக நடைபெற்று வருகிறது. தலித் மக்களின் மீது நடத்தப்படும் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடி வந்த இளைஞர் ஜிக்னேஷ் மேவானி சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கி உள்ளார். வடக்கு குஜராத்தின் வட்காம் தொகுதியில் காங்கிரஸ் ஆதரவுடன் ஜிக்னேஷ் மேவானி போட்டியிடுகிறார்.

இந்நிலையில் குஜராத்தில் புதிய தலைமுறை செய்தியாளரிடம் பேசிய அவர், கடந்த 2 ஆண்டுகளாகவே பாஜக அரசு அனைத்து வகைகளிலும் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக தெரிவித்தார். தற்போது நடைபெற்று வரும் தேர்தலில், வாக்குப்பதிவு இயந்திரங்களை முறைகேடாக பயன்படுத்தினாலும், அதிகளவில் பணத்தைச் செலவு செய்தாலும், மக்கள் பாஜக அரசை தோற்கடிக்க முடிவெடுத்து விட்டதாக கூறினார். மேலும் இந்த தேர்தல் தனிநபர் சம்பந்தப்பட்ட யுத்தம் இல்லை என்றும், ஆறரை கோடி குஜராத் மக்களுக்கும் பாஜகவுக்கும் இடையிலான யுத்தம் என்றும் தெரிவித்தார்.

பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாந்த மக்கள் தற்போது போராட துவங்கிவிட்டதாக தெரிவித்த ஜிக்னேஷ், தான் எப்போதும் பாஜக அரசை போல் மதங்கள் பற்றி பேச போவதில்லை என்றும், வளர்ச்சி குறித்து பேசுவதையே விரும்புவதாக தெரிவித்தார். தாழ்த்தப்பட்டோரின் பிரநிதியாக, இந்த தேர்தலில் நிற்பதாகவும், தன்னை வட்காம் பகுதியில் உள்ள அனைத்து சமூகத்தினரும் ஆதரித்து வருவதாகவும் ஜிக்னேஷ் மேவானி கூறினார்.