குஜராத் ராஜ்கோட் மேற்கு தொகுதியில் போட்டியிட்ட அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி முன்னிலை வகிக்கிறார்.
குஜராத் மாநிலத்தில் கடந்த 9 மற்றும் 14ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு வெளியான கருத்துக்கணிப்புகளில் அதிகமான இடங்களை பாஜகவே கைப்பற்றும் எனக் கூறப்பட்டது. அதன்படியே பாஜக தற்போதைய நிலவரப்படி 80க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 50க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
குஜராத் மாநில ராஜ்கோட் மேற்குத் தொகுதியில் போட்டியிட்ட, பாஜகவைச் சேர்ந்த அம்மாநிலத்தின் முதலமைச்சர் விஜய் ரூபானி தற்போதைய நிலவரப்படி முன்னிலை வகித்து வருகிறார். இன்றைய வாக்கு எண்ணிக்க தொடர்பாக நேற்று பேசியிருந்த அவர், “குஜராத் தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதாவுக்கு சாதகமாக இருக்கும் என முழுமையாக நம்புகிறேன். பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கும். அதற்கு மூன்றில் இரண்டு பங்கு தொகுதிகள் கிடைக்கும். குஜராத் மக்கள் வளர்ச்சி அரசியலுக்கு வாக்களித்துள்ளனர். பிரதமர் மோடி வளர்ச்சியை கொண்டுவந்துள்ளார். வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த புகார்களில் எந்த முகாந்திரமும் இல்லை” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.