குஜராத்தில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அர்த்தமற்றவை, பாஜக இந்தமுறை ஆட்சியமைக்க முடியாது என்று ஜிக்னேஷ் மேவானி கூறினார்.
குஜராத் தேர்தலில் பன்ஸ்கந்தா மாவட்டத்தின் வட்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டவர் ஜிக்னேஷ் மேவானி. வட்கம் தொகுதியில் இரண்டு வாக்குச்சாவடிகளுக்கு மறு வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவை பார்வையிட சென்ற ராஷ்ட்ரிய தலித் அதிகார் மன்ஞ் இயக்கத்தின் தலைவர் ஜிக்னேஷ் மேவானி செய்தியாளர்களிடம் பேசியதாவது, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அர்த்தமற்றவை, பாஜக நிச்சயமாக தோல்வியடையும், இந்தமுறை அவர்களால் ஆட்சியமைக்க முடியாது என்று கூறினார்.
வட்கம் தொகுதியில் வேட்பாளரை நிறுத்தாமல், ஜிக்னேஷ் மேவானிக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளது. தலித் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராகவும், தலித் மக்களுக்கு விவசாய நிலங்களை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி ஊனாவில் மிகப்பெரிய பேரணியை நடத்தி ஜிக்னேஷ் மேவானி போராட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.