எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் சூழலில், ஆளுநர் வித்தியாசாகர் ராவ் நாளை சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் ஆளுநரை சந்தித்து முறையிட்ட திமுக செயல் தலைவர் ஸ்டாலின், சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார். அதற்கு முன்னதாக, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முதல்வருக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கி கொண்டதாக ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். இந்த சூழ்நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து நாளை சென்னை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று எடப்பாடி பழனிசாமியின் அரசை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா அல்லது வேறு ஏதேனும் முடிவு எடுப்பாரா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.