கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திடீர் திருப்பமாக, மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி முதல்வராகப் பொறுப்பேற்க காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவை அளித்துள்ளது.104 தொகுதிகளில் பாரதிய ஜனதா வெற்றி பெற்று முதலிடத்தில் இருந்தாலும், எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
கர்நாடகத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிப் பெற்ற பாரதிய ஜனதா ஆட்சியமைப்பதை தடுக்க மதசார்பற்ற ஜனதா தளத்துடன் கைகோர்த்துள்ளது காங்கிரஸ். காங்கிரஸ் 78 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் 37 இடங்களை கைப்பற்றியுள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று பெங்களூருவில் நடக்கிறது. அதில் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க ஆதரவளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இதே போல் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.க்களின் கூட்டமும் இன்று நடக்க உள்ளது. இதில் குமாரசாமி சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார். இதனை தொடர்ந்து எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார் குமாரசாமி.
காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளத்தின் முயற்சிகள் ஒருபுறம் இருக்க, தனிப்பெரும் கட்சியான பாரதிய ஜனதாவும் ஆட்சி அமைக்க உரிமை கோர முடிவு செய்துள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான 112 எம்.எல்.ஏ.க்கள் இல்லாத போதிலும் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரப்போவதாக பாரதிய ஜனதா முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இன்று காலை நடைபெறும் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், எடியூரப்பா சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார். ஆட்சி அமைக்க கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா யாருக்கு அழைப்புவிடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில், முன்னாள் முதல்வர் சித்தராமையா, பாரதிய ஜனதா முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, மதச்சார்பற்ற ஜனதா தலைவர் குமாரசாமி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சி குறைவான இடங்களில் வெற்றி பெற்றாலும் வாக்கு சதவிகிதத்தில் பாரதிய ஜனதாவை முந்தியுள்ளது. மொத்த வாக்குகளில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ள நோட்டா, கட்சிகளின் வெற்றி விகிதத்தை பாதித்திருக்கிறது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
காங்கிரஸ் ஆதரவு உள்ளதால் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும் பாரதிய ஜனதாவிடம் பெரும்பான்மை பலம் இல்லை. இருவரில் யாரை அழைப்பது என்பதில் ஆளுநருக்கு இரண்டு விதமான வாய்ப்புகள் உள்ளன. ஒன்று எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி 104 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ள பாரதிய ஜனதாவை ஆட்சி அமைக்க அழைக்கலாம். குறிப்பிட்ட கால அவகாசத்தில் அவர்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால் அடுத்தவருக்கு அழைப்பு விடுக்கலாம். இரண்டாவதாக, கோவா, மணிப்பூர் தேர்தலில் நடந்தது போல் கூட்டணி பலம் அதிகம் உள்ள கட்சியை ஆட்சி அமைக்க அழைக்கலாம். கர்நாடகாவில் ஆட்சி அமைக்க 112 இடங்கள் தேவை என்கிற நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி 117 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ளது. எனவே ஆட்சி அமைக்க வருமாறு மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு ஆளுநர் அழைப்பு விடுக்கலாம். இதில் எந்த முடிவை வேண்டுமானாலும் ஆளுநர் எடுக்கலாம். யாரை அழைக்கலாம் என்பதை முடிவு செய்ய ஆளுநர் விரும்பினால் அவகாசம் எடுத்துக் கொள்ளலாம். இந்த விவகாரத்தில் கர்நாடகா ஆளுநர் வஜூபாய் வாலா என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பதை அறிய அரசியல் கட்சிகள் மட்டுமின்றி கர்நாடக மக்களும் காத்திருக்கின்றனர். பாரதிய ஜனதா, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்கள் இன்று தனித்தனியே ஆலோசனை நடத்தவுள்ளனர்.