டிரெண்டிங்

காய்ச்சலால் உயிரிழப்புகள் இருக்கக்கூடாது என்பதில் அரசு உறுதி: அமைச்சர் விஜயபாஸ்கர்

Rasus

காய்ச்சலால் உயிரிழப்புகள் இருக்கக்கூடாது என்பதில் அரசு உறுதியுடன் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

காய்ச்சல் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சேலத்தில் இன்று அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து சுகாதார விழிப்புணர்வு பேரணியையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

அடுத்ததாக, அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை‌க்கு சென்ற அமைச்சர், அங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நோயாளிகளை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். மேலும் சிகிச்சையை தீவிரப்படுத்தும்படி அங்குள்ள மருத்துவர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஒருவர் காய்ச்சலால் இறந்துவிட்டார் என்கிற நிலைமை ஏற்பட்டுவிடக் கூடாது என்ற நிலையில் தமிழக அரசு உறுதியுடன் இருக்கிறது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் உள்பட அனைத்து மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்காக பிரத்யேகமான வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளும் கண்காணிப்பட்டு வருகின்றன. மூன்று பேருக்கு அதிகமாக ஒரு இடத்தில் காய்ச்சல் இருக்கும் பட்சத்தில் கூடுதல் கவனத்துடன் கவனிக்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.