காந்தியின் பேரன் என்பதால் தன்னை ஆதரிக்க வேண்டும் என ஓட்டு கேட்பது கேவலமானது என்றும், அவ்வாறு கேட்டால் தனக்கு ஓட்டு போடக்கூடாது என எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசு துணை தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோபாலகிருஷ்ண காந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, கோபாலகிருஷ்ண காந்தி புதியதலைமுறைக்கு அளித்த பேட்டியில், “நான் கட்சி, அரசியல் சார்ந்தவன் அல்ல. ஒரு இந்தியக் குடிமகனாகவே தேர்தலில் போட்டியிடுகின்றேன். கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு போட்டியிடுகிறேன். தமிழக அரசிடம் கடிதம் மூலம் ஆதரவு கோரினேன். திமுக ஆதரவு அளித்ததற்காக மரியாதை நிமித்தமாக கருணாநிதியுடன் சந்தித்தேன். காந்தியின் பேரன் என்பதற்காக என்னை ஆதரிக்கக் கூடாது. காந்தியின் பேரன் என்று ஆதரவு கேட்டால் அது கேவலமானது. நான் போட்டியிடுகிறேன் என்று பாஜகவுக்கு தெரியும். அவர்கள் விரும்பினால் என்னை ஆதரிக்கலாம்” என்று அவர் கூறினார்.