செய்தியாளர் - கார்த்திகேயன்
2026-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், தங்கத்தின் விலை என்பது வரலாறு காணாத அளவில் உயர்ந்திருந்தது. ஒரு அவுன்ஸ் தங்கம், 5 ஆயிரத்து 594.82 டாலர் என்ற அளவுக்கு உயர்ந்திருந்தது. ஆனால், தற்போது தங்கத்தின் விலை படிப்படியாக சரிவை நோக்கி சென்று வருகிறது. நவம்பர் 20-ஆம் தேதியை பொறுத்தவரையில், ஒரு அவுன்ஸ் தங்கம் 3 ஆயிரத்து 585.92 டாலர் என்ற அளவில், விற்பனையாகி வருகிறது. மொத்தமாக, சுமார் 35 சதவீதம் அளவுக்கு தங்கத்தின் விலை சரிந்து வருகிறது. செப்டம்பர் 2025-க்கு பிறகு இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. இவ்வாறு தங்கம் விலை சரிவதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. டாலரின் மதிப்பு அதிகரிக்கும்போது, மற்ற நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் தங்கம் வாங்க அதிகம் செலவு செய்ய வேண்டியிருப்பது, அமெரிக்க அரசு பத்திரங்களின் வட்டி விகிதம் உயர்வது போன்ற காரணங்களால் தங்கம் விலை சரிவை நோக்கி செல்கிறது.
இதுமட்டுமின்றி, பங்குசந்தையில் ஏற்பட்ட சரிவால், சில முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்பனை செய்து, பணமாக மாற்றி வருகின்றனர். இதுவும் தங்கம் விலை சரிவுக்கு காரணமாக உள்ளது. இந்நிலையில், 2027-ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை என்னவாக இருக்கப்போகிறது என்று, கோல்ட்மேன் சாக்ஸ் ( Goldman Sachs ) நிறுவனம் தங்களது கணிப்புகளை வெளியிட்டுள்ளது. இது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தங்கத்தின் விலை குறைந்திருந்தாலும், கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் நீண்ட காலத்தில் அதன்மீது நம்பிக்கை வைத்துள்ளது. இதனால், 2027-ஆம் ஆண்டின் இறுதியில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4 ஆயிரத்து 650 என்ற அளவில் அதிகரிக்கும் என்று கணிப்புகளை வெளியிட்டுள்ளது.
உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவிப்பது, சீனாவின் மத்திய வங்கி தங்க இருப்பை தொடர்ந்து அதிகரிப்பது, 2027-ல் அமெரிக்க அரசு பத்திரங்களின் வட்டி விகிதம் குறையும் என்ற எதிர்பார்ப்பு போன்ற பல்வேறு காரணங்களை அடுக்கி, தங்கம் விலை அதிகரிக்கும் என்று, கோல்ட்மேன் சாக்ஸ் கூறுகிறது. மேலும், 2027-ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2028 செப்டம்பர் மாதம் வரை, அமெரிக்க மத்திய வங்கி, 4 முறை வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்பு உள்ளது. இதனால், தங்க ETF முதலீடுகள் அதிகரிக்கும். இதன் அடிப்படையில், தங்கத்தின் விலை 2028-ஆம் ஆண்டின் இறுதியில், 5 ஆயிரத்து 600 டாலராக உயரும் என்றும், அந்நிறுவனம் கணித்துள்ளது.
இவ்வாறு கோல்ட்மேன் சாக்ஸ் கூறியிருப்பதால், தங்கம் வாங்கலாமா வேண்டாமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அதற்கு பதில் அளித்தால், ஒரே நேரத்தில் மொத்த பணத்தையும் தங்கத்தில் முதலீடு செய்யாமல், படிப்படியாக முதலீடு செய்யலாம் என்றும், முதலீட்டு தொகுப்பின் ஒரு பகுதியாக தங்கத்தை வைத்துக் கொள்ளலாம் என்றும், நிபுணர்கள் அறிவுரை வழங்குகின்றனர். மேலும், குறுகிய கால லாபத்தைவிட நீண்ட கால முதலீடுகளில் கவனம் செலுத்துங்கள் என்றும் கூறுகின்றனர்.