வாங்கிய கடனை திரும்ப செலுத்தவில்லை என்றால் இறந்துவிட்டதாக சான்றிதழ் கொடுக்குமாறு விவசாயிக்கு வங்கி தரப்பில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட கொடுமை திருச்சியில் நிகழ்ந்துள்ளது.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள கரியமாணிக்கம் ஊராட்சியின் குருவம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகானந்தம். இவர் திருச்சி தில்லைநகரில் உள்ள சோழமண்டல தனியார் பைனான்ஸ் வங்கியில் டிராக்டர் வாங்க ரூ.1.90 லட்சம் கடன் பெற்று, 3 தவனைகள் செலுத்தியுள்ளார். தற்போது கொரோனா வைரஸ் பொதுமுடக்கத்தின் காரணமாக போதிய வருவாய் இல்லாததால், மாதத் தவனை செலுத்தாமல் இருந்துள்ளார்.
கடன் தொகையை கேட்டு தினமும் விவசாயி முருகானந்தம் வீட்டிற்கு தனியார் வங்கி ஊழியர்கள் வந்து தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. அத்துடன் அவர்கள் முருகானந்தம் வீட்டில் வந்து கட்டிலில் படுத்து உறங்குவதாகவும், கடைகளில் மதிய உணவு வாங்கி வரச் சொல்லி சாப்பிடுவதாகவும், அதன்பின்னர் தூங்கிவிட்டு இரவு தான் வீட்டிற்கு செல்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அதுமட்டுமின்றி, “நீ இறந்து விட்டதாக இறப்பு சான்றிதழ் வாங்கிக் கொடு, உனது கடனை ரத்து செய்கிறோம்” என முருகானந்தம் தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான விவசாயி முருகானந்தம் வாத்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.