டிரெண்டிங்

பொதுக்குழு செல்லாது என அறிவிக்க கோரிக்கை: தேர்தல் ஆணையத்தில் தினகரன் தரப்பு புதிய மனு

பொதுக்குழு செல்லாது என அறிவிக்க கோரிக்கை: தேர்தல் ஆணையத்தில் தினகரன் தரப்பு புதிய மனு

webteam

ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் தரப்பு கூட்டிய பொதுக்குழுவை செல்லாது என அறிவிக்குமாறு, தினகரன் அணியினர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர்.

கடந்த 12ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அணியினர் சார்பில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்தது செல்லாது, அதிமுகவில் அனைத்து அதிகாரங்களும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கே உள்ளது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் 95 சதவிகிதம் அதிமுக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர் என்று ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் ஆதாரவாளர்கள் தரப்பில் கூறப்பட்டது.

இந்த பொதுக்குழுவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தினகரன், இது பொதுக்குழுக் கூட்டம் அல்ல என்றும், பொதுக்கூட்டம் என்றும் தெரிவித்தார். அத்துடன் தற்போது உள்ள ஆட்சியை கலைக்கும் நேரம் வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். தினகரன் ஆதாரவாளர்களும் தங்களை பொதுக்குழுவிற்கு அழைக்கவில்லை ஆகையால் இது பொதுக்குழுக் கூட்டம் அல்ல என்று கூறி வந்தனர். இந்நிலையில் ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் அணியினர் நடத்திய பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்குமாறும், 12 தீர்மானங்களை ரத்து செய்யுமாறும் தேர்தல் ஆணையத்தில் தினகரன் ஆதரவு எம்.பிக்கள் புதிய மனு தாக்கல் செய்துள்ளனர். விஜிலா சத்தியானந்த், வசந்தி முருகே‌ன், செங்குட்டுவன்‌ உள்ளிட்ட தினகரன் ஆதரவு எம்.பி.க்கள் இந்த மனுவை அளித்துள்ளனர்.