டிரெண்டிங்

வானகரம் குடியிருப்பு பகுதியில் குப்பை கிடங்கு : நோயாளி போல் சித்தரித்து நூதன போராட்டம்

வானகரம் குடியிருப்பு பகுதியில் குப்பை கிடங்கு : நோயாளி போல் சித்தரித்து நூதன போராட்டம்

webteam

சென்னையை அருகேயுள்ள வானகரம் ஊராட்சியில் குப்பை கிடங்கு அமைக்கபடுவதை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தினர்.

சென்னை போரூரை அடுத்த வானகரம் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பையை, அதேப்பகுதியில் குப்பை கிடங்கு ஒன்று அமைத்து தரம் பிரித்து அனுப்ப ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. குப்பை கிடங்கு அமைய உள்ள இடத்தில் 5 ஆயிரம் குடும்பங்களுக்கு குடிநீர் செல்லும் மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி உள்ளது. அந்த இடத்தை சுற்றி 500க்கும் மேற்பட்ட வீடுகள், தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. அங்கு குப்பை கொட்டப்படுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன், துர்நாற்றம் வீசுவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் கொசுக்கடியுடன், தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் குப்பை கிடங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். உடல் நலம் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் ஸ்ட்ரெச்சரில் படுத்திருப்பது போலவும், அவர்களுக்கு குளுகோஸ் ஏற்றுவது போல நூதனமாக போராட்டம் நடத்தினர். மேலும் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.

ஏற்கனவே கொரோனா தொற்றால் அவதிப்படும் நேரத்தில், குப்பையை கொட்டி நோய் பரப்பும் சூழ்நிலையை ஏற்படுத்துவது அபாயகராமனது எனவும் மக்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என எச்சரித்தனர்.