டிரெண்டிங்

“ஒரே நொடிதான்... மொத்தமும் காலி” - திருமண நிகழ்வை துவம்சம் செய்த ஒற்றை பேரலை!

JananiGovindhan

ஃபேன்சியாக, காலத்திற்கேற்றார் போல திருமணங்களை நடத்த வேண்டும் என பலரும் மெனக்கெட்டு பல தீம்கள் அடிப்படையில் நடத்தி வருகிறார்கள். இதற்கென தனி ஏஜென்சிகளும் செயல்பட்டு வருகின்றன.

வாழ்வின் முக்கியமான தருணத்தை மிக முக்கியமானதாக, மறக்க முடியாத நிகழ்வாக இருக்க வேண்டும் என நினைத்து பல வேடிக்கையான செயல்களையும் செய்து வருகிறார்கள்.

ஆனால் ஹவாய் தீவில் நடந்த திருமண நிகழ்வு அந்த மணமக்களுக்கு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நாளாகத்தான் இருக்கும் என்பதை அது தொடர்பாக வைரலாகியிருக்கும் வீடியோ மூலம் அறியலாம்.

அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள ஒரு பகுதியில் டில்லியன் , ரிலே மர்ஃபி என்ற ஜோடியின் திருமணம் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற இருந்தது. இதற்காக கடற்கரையோரமாக ஏற்பாடுகள் எல்லாம் செய்து திருமண நிகழ்வை தொடங்க நினைத்தனர்.

அப்போது, திடீரென பேரொலியுடன் வந்த பேரலை ஒன்று கரைக்கு அப்பால் நடந்த திருமண ஏற்பாடுகள் அனைத்தையும் அடித்து துவம்சம் செய்துவிட்டது. இதனைக் கண்டு வாயடைத்துப்போய் விட்டனர் திருமணத்துக்கு வந்த விருந்தாளிகள்.

இதனால் அங்கிருந்த டேபிள், சேர் உள்ளிட்ட அனைத்தும் கடல் அலையால் கவிழ்ந்து கிடந்திருக்கிறது. பேரலை அடித்தும் அங்கு எந்த உயிர் சேதங்களும், எவருக்கும் காயங்களும் ஏற்படவில்லை என ABC நியூஸ் மூலம் தெரிய வந்திருகிறது.

இது தொடர்பான வீடியோ இன்ஸ்டாகிரம், ட்விட்டர் என அனைத்து தளங்களிலும் வைரலாகி நெட்டிசன்களின் கவனத்தை பெற்றிருக்கிறது. அதில் “நல்லவேளை கேக் தப்பித்தது” என ஒருவரும், “இது பைத்தியக்காரத்தனம், நானும் திருமணங்களை நடத்தி வைக்கிறேன். ஆனால் ஒரு ஒருங்கிணைப்பாளராக இது பேரழிவாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

முன்னதாக, டர்பி என்ற தீவிர புயல் ஹவாய் தீவில் தான் கரையைக் கடக்க இருந்ததை அறிந்தும் அந்த பகுதியில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.