crocodile
crocodile file image
டிரெண்டிங்

பல்லி, கரப்பானை அடுத்து கழிவறையில் உலாவிய முதலை.. அதுவும் 7 அடி நீளம்.. எங்கு தெரியுமா?

Janani Govindhan

பல்லி, கரப்பான் போன்ற உயிரினங்கள் வீட்டில் உள்ள கழிவறைகளில் உலவுவதுண்டு. ப்ளம்பிங் பணியின் போது நிகழ்ந்த கோளாறு காரணமாக பைப் லைன் வழியாக ஊர்வன உயிரினமான பாம்புகள் கழிவறை இருக்கைகள் வழியாக வீட்டுக்குள் வருவது பற்றிய நிகழ்வுகளையும் அறிந்திருப்போம்.

ஆனால், 7 அடி நீளம் கொண்ட மிகப்பெரிய முதலை உங்கள் வீட்டின் கழிவறையில் கண்டால் அது எப்படி இருக்கும் என நினைத்து பார்க்கவே கொடூரமான கெட்ட கனவாகவே இருக்கும். இருப்பினும் இப்படியொரு நடு நடுங்க வைக்கும் சம்பவம் ஆக்ரா அருகே நேற்று முன்தினம்தான் நடந்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?

reptile

ஆம். உத்தர பிரதேசத்தின் ஃபிரோஸ்புர் மாவட்டத்துக்குட்பட்ட நாக்லா பசி கிராமத்தில் கடந்த ஞாயிறன்று காலை அங்குள்ள வீடு ஒன்றின் கழிவறையில் 7 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று புகுந்திருக்கிறது. அருகே உள்ள குளம் வழியாக வந்திருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

வீட்டு கழிவறையில் பிராமண்டமான முதலை இருந்ததை கண்டவர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்திருக்கிறார்கள். இதனையடுத்து உடனே விரைந்து வந்த வனத்துறையினர் பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அவர்களுடன் நான்கு பேர் கொண்ட NGO குழுவும் சம்பவ இடத்துக்கு வந்து முதலையை மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க பெரிதும் உதவியாக இருந்தனர். சுமார் இரண்டு மணிநேர போராட்டத்துக்கு பிறகு முதலையை பொறியில் அடைத்து மிகவும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறது.

இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குளக்கரை பகுதி அருகே சுற்றித் திரிந்திருந்த அந்த முதலை குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்திருப்பதாக தெரிய வந்திருக்கிறது. அதன் பின்னர் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட அந்த முதலையை அதற்கான வாழ்விடத்தில் வனத்துறையினர் வெளியேற்றியிருக்கிறார்கள்.

இது குறித்து பேசியுள்ள வனத்துறை அதிகாரி பைஜு ராஜ், “நடப்பு மாதத்திலேயே இரண்டாவது முறையாக குடியிருப்பு பகுதியில் இருந்து முதலை மீட்கப்பட்டிருக்கிறது. கங்கை நதியின் கால்வாய் பகுதிகளில் தண்ணீர் குறைந்ததன் காரணமாக அந்த நீர் நிலைகளில் இருந்து விலகும் முதலைகள் வீடுகளுக்குள் நுழைந்து விடுகின்றன. இருப்பினும் மக்கள் அஞ்சாமல் வேறு எந்த செயலிலும் ஈடுபடாமல் முறையாக தகவல் கொடுத்திருப்பது பாராட்டத்தக்கது” என்று கூறியிருக்கிறார்.