அதிமுக அணிகள் இணைவதற்கு வழங்கிய காலக்கெடு இன்றுடன் முடியும் நிலையில் அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வரும் 14 ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் எம்ஜிஆர் நூற்றாண்டையொட்டி மாவட்டவாரியாக பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். முதல் கட்டமாக வரும் 14 ஆம் தேதி மதுரை மாவட்டம் மேலூரில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 23 ஆம் தேதி வடசென்னையிலும், 29ஆம் தேதி தேனியிலும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. செப்டம்பர் 5ஆம் தேதி கரூரிலும், 12ஆம் தேதி தஞ்சாவூரிலும், செப்டம்பர் 23 ஆம் தேதி நெல்லையிலும், 26 ஆம் தேதி தருமபுரியிலும், அதிமுக அம்மா அணி சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெறும். செப்டம்பர் 30 ஆம் தேதி திருச்சியிலும், அக்டோபர் 5 ஆம் தேதி சிவகங்கையிலும் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அதிமுவின் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைய 60 நாட்கள் அவகாசம் அளிப்பதாகவும், அதன் பின்னர் கட்சியை இணைக்கும் பணியில் தாம் ஈடுபடப்போவதாகவும் டிடிவி.தினகரன் அறிவித்திருந்தார். இந்நிலையில் அதிரடி திருப்பமாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்லப்போவதாக தினகரன் அறிவித்துள்ளார்.