டிரெண்டிங்

பாரதிய ஜனதாவிற்கு சவாலாக மாறியுள்ள 4ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்

webteam

இன்று நடைபெற்று வரும் 4ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் பாரதிய ஜனதா கட்சியை பொருத்தவரை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

காஷ்மீரின் அனந்த்நாக் தொகுதியையும் சேர்த்து மொத்தம் 72 தொகுதிகளில் 4ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் நடக்கும் நிலையில், இவற்றில் கடந்த முறை பாரதிய ஜனதா 56 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது. குறிப்பாக பாஜக கூட்டணி வலுவாக உள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் 17 தொகுதிகளில் 4ஆம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகி‌றது. 

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கடந்த முறை பாஜக அதிக தொகுதிகளை வென்றது. ஆகவே இங்கு எல்லாம் இம்முறையும் கடும் போட்டி நிலவுகிறது. கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் இங்கு காங்கிரஸ் வெற்றிக்கொடி நாட்டியது. அதனால் பாஜகவுக்கு இந்த மக்களவைத் தேர்தல் நெருக்கடியாக மாறியுள்ளது. 4வது கட்ட மக்களவைத் தேர்தலில் ராஜஸ்தானில் 13 தொகுதிகளிலும் மத்தியப் பிரதேசத்தில் 6 தொகுதிகளி‌லும் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. மறுபுறம் உத்தரப்பிரதேசத்தில் 13 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

இந்நிலையில்  சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ்  ஆகிய கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திப்பது பாரதிய ஜனதாவிற்கு  உத்தரப்பிரதேசத்தில் பெரும் சவாலாக உருவெடு‌த்துள்ளது. இது தவிர உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கடந்த முறை கிடைத்த அமோக வெற்றி இந்த முறை பாஜகவுக்கு கிடைக்குமா என்ற சந்தே‌கம் உள்ள நிலையில் அதை ஈடுகட்ட மேற்கு வங்காளம், ஒடிஷா ஆகிய மாநிலங்களை இம்முறை பாரதிய ஜனதா அதிகம் நம்பியுள்ளது. இவ்விரு மாநிலங்களில் 4வது கட்டத்தில் 14 தொகுதிகளில் தேர்தல் நடந்து வருகிறது. எனவே இன்று நடைபெற்று வரும் 4ம் கட்ட மக்களவை தேர்தல் பாரதிய ஜனதா கட்சியை பொருத்தவரை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.