2ஜி அலைக்கற்றை வழக்கில் உண்மை வென்றதாக ஆ.ராசாவுக்கு மன்மோகன் சிங் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் டிசம்பர் 21-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. ஆ.ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்ட அனைவரும் இந்த வழக்கில் இருந்து விடுக்கப்பட்டனர். குற்றச்சாட்டுக்களை ஆதாரங்களுடன் நிரூபிக்க அரசு தரப்பு தவறி விட்டதாக நீதிபதி தெரிவித்தார்.
வழக்கின் தீர்ப்பு வெளியான பின்னர் ஆ.ராசா பல்வேறு இடங்களில் வழக்கு விசாரணை குறித்த பல்வேறு தகவல்கள் பேசி வருகிறார். 2ஜி வழக்கை மன்மோகன் சிங் சரியாக புரிந்து கொள்ளவில்லை என ஆ.ராசா பகிரங்கமாக குற்றம்சாட்டினார். ’ஆனால் எதுவுமே சரியாகவில்லை. அதனுடைய விளைவை அவரே கடைசியில் அனுபவித்தார்’ என்றும் வெளிப்படையாக ஆ.ராசா பேசினார். இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
மேலும், டிசம்பர் 26 மன்மோகன் சிங்கிற்கு ஆ.ராசா எழுதிய கடிதத்தில், 2ஜி வழக்கில் பல இன்னல்களை அனுபவித்துள்ளேன். ஒருசில அமைச்சர்களே எனக்கு பாதகமாக செயல்பட்டார்கள். நீங்கள் எங்களுக்கு நேரடியாக, வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து துணை நின்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது உள்ளிட்ட பல விஷயங்களை குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஆ.ராசாவிற்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அதில், “2ஜி வழக்கில் ராசாவும் அவரது குடும்பத்தினர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். 2 ஜி வழக்கில் இருந்து விடுதலை ஆனது மகிழ்ச்சி. ராசாவின் கூற்று நிருபணமாகியுள்ளது. உண்மை வென்றுள்ளது. உங்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.