டிரெண்டிங்

பாஜகவுக்கு செக்? - ஸ்டாலினை சந்தித்த யஷ்வந்த் சின்ஹா!

பாஜகவுக்கு செக்? - ஸ்டாலினை சந்தித்த யஷ்வந்த் சின்ஹா!

rajakannan

சென்னையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினுடன் யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா சந்தித்தனர். ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பின் போது, திமுக முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா, டி.ஆர்.பாலு ஆகியோர் உடன் இருந்தனர். 

சமீபத்தில் சென்னை வந்த தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் ஸ்டாலினை சந்தித்தார். சந்திரசேகர் ராவ் சந்தித்த சில தினங்களில், யஷ்வந்த சின்ஹா, சத்ருகன் சின்ஹா ஸ்டாலினை சந்தித்துள்ளனர். 

சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய யஷ்வந்த் சின்ஹா, “எதிர்காலத்தில் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசித்தோம். பாஜக ஆட்சியில் ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டம் மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஸ்டாலின் உடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது. எதிர் காலத்தில் இணைந்து செயல்படுவோம் என்று நம்புகிறேன்” என்று கூறினார். 

ஸ்டாலின் பேசுகையில், ‘தமிழக அரசியல் சூழல் குறித்து கேட்டறிந்தனர். பாஜகவை ஆட்சியை அப்புறப்படுத்துவது தான் எங்கள் நோக்கம். அதுகுறித்து தான் ஆலோசனை செய்தோம்’ என்றார். முன்னாள் மத்திய அமைச்சரான யஷ்வந்த் சின்ஹா கடந்த சில வருடங்களாக பாஜகவை விமர்சித்து வருகிறார். இவர் சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகினார். ஆனால், சத்ருகன் சின்ஹா பாஜக எம்.பி ஆக உள்ளார். இவரும் பாஜகவுக்கு எதிராக அவ்வவ்போது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக புதிய கூட்டணி அமைக்கும் முயற்சியில் மம்தாவும், சந்திரசேகர் ராவும் ஈடுபட்டுள்ளனர். தங்களுடைய முயற்சிக்கு துணையாக ஸ்டாலினுக்கும் அவர்கள் அழைப்புவிடுத்துள்ளனர். இந்த புதிய முயற்சிக்கு வலுசேர்க்கும் வகையில் ஸ்டாலினுடனான யஷ்வந்த் சின்ஹா சந்திப்பு அமைந்துள்ளது.