இந்திய அரசியலில் தவிர்க்கவே முடியாத ஆளுமையாக கருதப்பட்டவர் ஜெயலலிதா. சினிமா துறையில் ஜாம்பவானாக விளங்கிய அவர், தமிழக அரசியலிலும் யாரும் அசைத்து பார்க்க முடியாத பெரும் தலைவராக விளங்கினார். தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமை ஜெயலலிதாவுக்கு உண்டு.மேலும் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சரான முதல் பெண் தலைவர் என்ற பெருமையும் ஜெயலலிதாவை சாரும். இதுபோல பல பெருமைக்கு சொந்தக்காரான ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 தேதி உயிரிழந்தார். அவர் மறைந்து இரண்டு ஆண்டு ஆகியும் அதுதொடர்பான சர்ச்சைகளும் விவாதங்களுக்கும் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாள் விழா இந்தாண்டு கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் வெண்கலச் சிலை திறக்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து இந்தச் சிலையை திறந்து வைத்தனர். 7 அடி உயரம் கொண்டதாக இந்த சிலை அமைந்திருந்தது. அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்கெனவே அதன் நிறுவனர் எம்ஜிஆருக்கு சிலை உண்டு. அதன் அருகேதான் தற்போது ஜெயலலிதாவுக்கும் சிலை திறக்கப்பட்டது. ஜெயலலிதாவின் வெண்கல சிலையை பிரசாத் என்பவர்தான் வடிவமைத்திருந்தார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்ட ஜெயலலிதாவின் சிலை குறித்து பலரும் தங்களது கருத்தை பதிவு செய்தனர். திறக்கப்பட்டது ஜெயலலிதா சிலை போன்றே இல்லை என பலரும் தங்களது கருத்தை பதிவு செய்தனர்.மேலும் ஜெயலலிதாவின் சிலையை திறப்பதற்கு பதிலாக முன்னாள் அமைச்சர் வளர்மதியின் சிலையை திறந்திருப்பதாக பலரும் விமர்சனம் செய்தனர். பலர் ஜெயலலிதாவின் முகத்தையே மாற்றிவிட்டார்கள். தயவுசெய்து சிலையில் ஜெயலலிதா என எழுதி ஒட்டவும் என தெரிவித்திருந்தார்.இது ஜெயலலிதாவா...? அல்லது வேறு யாரோவா என பலரும் கேள்வி எழுப்பினார்கள். இதனால் ஜெயலலிதாவின் சிலை குறித்த விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் அனலாக பறந்தது.
விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில், சிலையை திறந்து வைத்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, ஜெயலலிதாவின் சிலையை வடிவமைத்த பிரசாத் என்பவருக்கு தங்க மோதிரம் ஒன்றை பரிசளித்தார்.இதனையடுத்து திறக்கப்பட்ட சிலை ஜெயலலிதாவின் உருவம் போன்று இல்லை என பல்வேறு தரப்பினரும் சமூகவலைத்தளங்களில் கருத்துக் கூற, ஜெயலலிதாவின் சிலையில் மாற்றம் கொண்டு வருவது குறித்து கட்சியின் தலைமை முடிவு செய்யும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.மேலும் சமூக வலைதளங்களில் பரவும் கருத்துகளுக்கு மதிப்பளித்து இந்த முடிவு எடுக்கப்படுவதாகக் கூறினார்.
இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலை மாற்றப்படவுள்ளது. இந்த சிலை 8 அடி உயரம் கொண்டது. மேலும் 800 கிலோவில் அளவில் செய்யபட்ட இந்த சிலை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓரிரு நாட்களில் வைக்கப்படவுள்ளது.8 அடி உயரத்தில் 800 கிலோ அளவில் வடிவமைத்து முடிக்க 5 மாதங்கள் ஆனது என சிலையை வடிவைமைத்த ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரியை சேர்ந்த சிற்பி ராஜ்குமார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து புதிய சிலைக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் அளித்துள்ளனர்.மேலும், சிலை விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.