அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பாஜகவில் இணைந்தார்.
டெல்லியில் அமித்ஷா முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார். அதிமுகவைச் சேர்ந்த வேலூர் முன்னாள் மேயர் கார்த்தியாயினி, ஆற்காடு முன்னாள் எம்எல்ஏ சீனிவாசன் ஆகியோரும் பாஜகவில் இணைந்தனர்.
அதிமுகவின் ஓபிஎஸ் ஈபிஎஸ் ஆகிய இரு அணிகளும் மத்திய பாஜக அரசிடம் இணக்கமாக இருந்து வந்தன. இதனைத் தொடர்ந்து இரு அணிகளும் இணைந்து, ஓ.பன்னீர் செல்வம் துணை முதலமைச்சராக பதவி ஏற்றார். அதிமுகவுக்கும் அவர் ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனை ஏற்காத தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் முதலமைச்சர் மீது நம்பிக்கை இல்லை என ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.
இந்தப் பரபரப்பான சூழ்நிலையில் டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் அமீத்ஷா முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பாஜகவில் இணைந்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் நயினார் நாகேந்திரன். நெல்லை தொகுதியில் இரண்டு முறை அ.தி.மு.க., சார்பில் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர். அதிமுக அரசில் போக்குவரத்து அமைச்சராக இருந்தவர். கடந்த சட்டசபை தேர்தலில் சொற்ப ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின் சசிகலாவை ஆதரித்தார்.