டிரெண்டிங்

நீங்களும் பண்ண மாட்டிங்க, எங்களையும் விட மாட்டீங்களா ? கொதிக்கும் மக்கள்

நீங்களும் பண்ண மாட்டிங்க, எங்களையும் விட மாட்டீங்களா ? கொதிக்கும் மக்கள்

webteam

கடலாடி அருகே உள்ள சிக்கல் பாசனக்கண்மாயில் கருவேலமரங்களின்  ஆக்கிரமிப்புகளை பொதுமக்களே அகற்ற வனத்துறை திடீர் தடை விதித்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகாவிற்கு உட்பட்ட சிக்கல் ஊராட்சியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் பாண்டிய மன்னர்கள் காலத்தில் சுமார்  470 ஹெக்டேர் பரப்பளவில்,  9 கிலோ மீட்டர்  நீள அளவிற்கு அமைக்கபட்ட பழமைவாய்ந்த கண்மாய் உள்ளது.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட நிர்வாகம் முறையாக பராமரிப்பு பணிகள் செய்து தூர்வாராததால், தற்போது கண்மாய் முழுவதும் மண் மேடாகவும்,  முட்செடிகள் மற்றும்  சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து அப்பகுதி விவசாயிகளுக்கு பாசன வசதியளிக்காமல் பயனற்ற நிலையில் உள்ளது. 

கண்மாயின் இந்த நிலையால், சிக்கல் பகுதியை சேர்ந்த விவசாயிகள்,  சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் நிதி  வசூல் செய்து  பொதுமக்களின் பங்களிப்புடன்  கண்மாயில் அடர்ந்து வளர்ந்து ஆக்கிரமித்துள்ள சீமைக்  கருவேல மரங்கள், முட்புதர்கள் மற்றும் மண்ணை அள்ளி தூர்வார முடிவெடுத்தனர். அதபடி பல லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டு ஜேசிபி இயந்திரங்கள் மூலமாக,  வருவாய்த்துறை,  மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒத்துழைப்புடன் அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.தூர்வாருதல் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, இந்த மரங்கள் தங்கள் துறைக்கு சொந்தமானது எனக்கூறி  கருவேலமரங்களை அகற்றும்  பணிகளை உடனே நிறுத்தும் படி தடுத்து நிறுத்தியதால், இப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சிக்கல்ல் பகுதியை சேர்ந்த பாக்கியநாதன் கூறுகையில் பல ஏக்கர் பாசனப் பகுதிக்கு பயன்பட்டு வந்த கண்மாய் சரியாக பராமரிக்கப்படாததல் பல ஆண்டுகளாக எங்களுக்கு எந்த பயனையும் கொடுக்கல, இனி மழைக்காலம் வரப்போ பெய்யிற மழைய எதுக்கு வீணக்கனும்ணு மக்கள் எல்லாரும் சேர்ந்து இந்த முடிவு எடுத்தாங்க , மாவட்ட நிர்வாகத்திட்ட பேசினப்போ கூட எந்த தடையும் சொல்லல, இப்பொ திடீர்னு வந்து இப்படி பண்றாங்க என வேதனையுடன் தெரிவித்தார்

இன்னும் சில பொதுமக்கள் கூறுகையில், மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று  பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை ஒத்துழைப்புடனும் பொதுமக்களின் பங்களிப்புடன்  ஒன்பது கி.மீட்டர் நீளமுள்ள இந்தக்கண்மாயில் நான்கு கி.மீட்டர் தூரம் வரை கருவேலமரங்களை அகற்றி தூர்வாரப்பட்ட நிலையில், தற்போது வனத்துறை தங்களுக்கு சொந்தமானது எனக்கூறி தடைவிதிப்பது தங்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்தனர்.மேலும் இப்பிரச்சனை தொடர்பாக தலைமைச்செயலாளரை சந்தித்து வனத்துறை மீது புகாரளிக்கப்போவதாகவும்  தெரிவித்தனர். 

பொதுமக்களின் குற்றச்சாட்டு சரியா என அறிந்து கொள்ள சாயல்குடி வனச்சரக அலுவலர் வெங்கடேஷிடம் கேட்டபோது, வனத்துறைக்கு சொந்தமான இந்த மரங்களை அகற்ற டெண்டர் மூலம் வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும் , மற்ற நபர்கள் யாரும் தாங்கள் நினைத்தபடி வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் மரங்களை அகற்றுவது மட்டுமல்ல வேறு எந்த பணியையும் மேற்கொள்ள முடியாது என தெரிவித்தார்.