டிரெண்டிங்

மாஞ்சோலையில் 3ஜி செல்போன் டவர் அமைக்க வனத்துறை எதிர்ப்பு!

மாஞ்சோலையில் 3ஜி செல்போன் டவர் அமைக்க வனத்துறை எதிர்ப்பு!

JustinDurai

மாஞ்சோலையில்  பி.எஸ்.என்.எல், 3ஜி வசதிகளை செய்து தர முன்வந்துள்ள நிலையில், வனத்துறை அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அங்குள்ள மாணவர்கள் ஆன்லைன் கல்வி வசதியை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணைப் பகுதிக்கு மேல்பகுதியில் மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, குதிரைவெட்டி, உள்ளிட்ட மலையோர கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்ட தொழிலாளர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

கடந்த 5 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு நீடித்து வரும் நிலையில் மலைவாழ் மக்கள் கீழே நகரங்களுக்கு வந்து பொருள்கள் வாங்கி செல்ல முடியாமல் திண்டாடுகின்றனர். வனத்துறை மற்றும் மின்வாரிய வாகனங்களில் தங்களுக்கு வேண்டிய பொருள்களை வாங்கிச் செல்கின்றனர்.

ஆகஸ்ட் மாதத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆன்லைன் வகுப்புகளை தொடங்கி விட்ட நிலையில் மாஞ்சோலை பகுதி மாணவர்கள் கல்வி கற்க முடியாத சூழல் நிலவுகிறது. அங்கு வசிக்கும் சுமார் 200 பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பாடங்களை படிக்க முடியாமல் திண்டாடுகின்றனர்.

மலையோர கிராமங்களில் பி.எஸ்.என்.எல். 2ஜி மட்டுமே கிடைக்கிறது. 3ஜி வசதி கொடுத்தால் மட்டுமே தங்கள் பாடங்களை கற்க முடியும் என மாணவர்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டு வந்தனர். இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி பி.எஸ்.என்.எல். சார்பில் அங்கு 3ஜி செல்போன் டவர் அமைக்கப்பட்டது. ஆனால் மறுநாளே வனத்துறை அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 3ஜி டவரை எடுக்க உத்தரவிட்டது.

களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக சரணாலயப் பகுதியில் மாஞ்சோலை அமைந்துள்ளதால், அங்கு 3ஜி செல்போன் அலைகளால் வனப்பகுதியில் குருவிகள் உள்ளிட்ட இனங்களும், சில அரியவகை பறவைகளும் அழிந்து விடும் என வனத்துறை எச்சரித்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் மீண்டும் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர்.

குறைந்தபட்சம் ஊரடங்கு முடியும் வரை இரு மாத காலத்திற்கு மட்டுமாவது, 3ஜி வசதிகளை மலையோர கிராமங்களுக்கு தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது குறித்து நெல்லை தேசிய தோட்டத் தொழிலாளர்கள் சங்க தலைவர் கோவிந்தராஜன், நெல்லையில் உள்ள புலிகள் காப்பக கள இயக்குனர் அலுவலகம் சென்று அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளார்.

அம்மனுவில் எஸ்டேட் பகுதியில் உள்ள மாணவ மாணவிகளின் நடப்பு கல்வியாண்டு கல்வி பாதிக்காமல் இருக்க அங்கு பி.எஸ்.என்.எல். 3ஜி டவர் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளார்.