டிரெண்டிங்

வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மூதாட்டி - உதவிக்கரம் நீட்டிய ரெட் கிராஸ் அமைப்பு

வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மூதாட்டி - உதவிக்கரம் நீட்டிய ரெட் கிராஸ் அமைப்பு

PT

வாடகை வீட்டில் வசித்த மூதாட்டியை வீட்டு உரிமையாளர் வலுக்கட்டாயமாக வெளியேற்றியதால் ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சமடைந்த  அவரை ரெட் கிராஸ் அமைப்பினர் அரசு காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

மதுரை திருமங்கலம் காடுபட்டிப் பகுதியைச் சேர்ந்தவர் 70 வயதான சோலை வீரம்மாள். இவரது கணவர் சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டதால் அரசின் விதவை உதவித்தொகையை பெற்றுக்கொண்டு அப்பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் 200 ரூபாய் வாடகைக்கு பத்து வருடங்களுக்கும் மேலாக தனியே வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் மூதாட்டி வசித்த வீட்டை விற்க உள்ளதாகக் கூறி, வீட்டை உடனே காலி செய்யுமாறு கூறியதாகத் தெரிகிறது. இதனையடுத்து வீட்டை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மூதாட்டி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தார்.

இந்நிலையில் ரெட்கிராஸ் அமைப்பினர் மூதாட்டியை மீட்டு அவருக்கு உணவு வழங்கியதோடு, மாவட்ட ஆட்சியர் அறிவுரையின்படி அவரை அரசின் முதியோர் காப்பகத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும் கடந்த ஒரு வருடமாக விதவை உதவித்தொகை கிடைக்கவில்லை என கூறிய மூதாட்டிக்கு விதவை உதவித்தொகை கிடைக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாகவும் ரெட்கிராஸ் அமைப்பினர் தெரிவித்தனர்.