டிரெண்டிங்

“எடியூரப்பா லஞ்ச புகாரை லோக்பால் முதலில் விசாரிக்க வேண்டும்” - காங்கிரஸ்

“எடியூரப்பா லஞ்ச புகாரை லோக்பால் முதலில் விசாரிக்க வேண்டும்” - காங்கிரஸ்

webteam

எடியூரப்பா டைரி விவகாரத்தை புதிதாக அமைக்கப்பட்டுள்ள லோக்பால் அமைப்பு முதல் வழக்காக விசாரிக்கவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. 

தேர்தல் நேரம் என்பதால் அரசியல் கட்சிகள் அனைத்தும் பிற கட்சிகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த வண்ணம் உள்ளனர். இவ்வாறு எழும் குற்றச்சாட்டுகளுக்கு அவ்வப்போது அரசியல் தலைவர்கள் பதிலடியும் கொடுத்தும் வருகின்றனர். 2007ஆம் ஆண்டு எடியூரப்பா பாஜக மேலிட தலைவர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக புகார்கள் வெளியாகின. அத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக சில உரையாடல்களும் வெளிவந்தன. எனினும் இந்த விவகாரம் தொடர்பாக பெரிதாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா பாஜகவின் மூத்த தலைவரான எடியூரப்பா மீது உள்ள குற்றச்சாட்டை மீண்டும் எழுப்பியுள்ளார்.

அதாவது, “எடியூரப்பா தொடர்பாக கிடைத்த டைரி குறித்து மோடி தலைமையிலான அரசு ஏன் விசாரிக்கவில்லை. அந்த டைரியில் உண்மை இல்லை என்றால் ஏன் பாஜக தயங்குகிறது. தற்போது லோக்பால் அமைப்பும் உருவாகியுள்ளது. ஆகவே லோக்பால் அமைப்பு ஏன் இதனை முதல் வழக்காக விசாரிக்க கூடாது. 

மேலும் 'கேரவன்' பத்திரிகையில் ‘எடியூரப்பா டைரீஸ்’ என்ற பெயரில் செய்திகள் வெளிவந்தன. அவை அனைத்தும் 2017ஆம் ஆண்டு வருமான வரித்துறையிடம் கிடைத்த எடியூரப்பா கையெழுத்திட்ட டைரியிலிருந்து வெளியானவை. அதில் 2009ஆம் ஆண்டு எடியூரப்பா பாஜகவின் மேலிட தலைவர்களுக்கு 1800 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. அது தவறு என்றால் ஏன் இன்னும் மோடி தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்கவில்லை? 

அத்துடன் இந்த லஞ்ச தொகை கடந்த ஐந்தாண்டுகளாக ஆட்சியில் உள்ளவர்களுக்கே கொடுக்கப்பட்டதால் இதனை லோக்பால் அமைப்பு விசாரிப்பதற்கு முகாந்திரம் உள்ளது. இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி கடந்த 2017ஆம் ஆண்டே எழுப்பிருந்தது. அப்போது நாங்கள் எடியூரப்பா மற்றும் அனந்த் குமார் லஞ்சம் கொடுப்பது தொடர்பாக உரையாடுவது வீடியோவாக வெளியிட்டோம். இதுவரை அதன் மீது ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” எனக் குற்றம் சுமத்தியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து இந்தப் புகார் குறித்து எடியூரப்பா, “இது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு. காங்கிரஸ் கட்சிக்கு தேர்தலில் முன்வைக்க எவ்வித விஷயமும் இல்லாததால், என் மீது அரசியல் காரணங்களுக்காக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. ஏற்கெனவே இந்த விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறை விசாரித்துள்ளது. அத்துடன் அந்த டைரியில் இருப்பது என்னுடைய கையெழுத்தே இல்லையென்றும் அது பொய்யானவை என்றும் தெளிவுப்படுத்தியுள்ளது” எனக் கூறியுள்ளார்.