டிரெண்டிங்

தமிழகத்தின் 2-வது தேர்தல்: திமுக சந்தித்த முதல் தேர்தல்... அண்ணா எதிர்க்கட்சித் தலைவர்!

Sinekadhara

தமிழகத்தின் இரண்டாவது சட்டமன்றத் தேர்தல் 1957-ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சியமைத்தது. திமுகவும் தனது வெற்றிக்கணக்கை தொடங்கி எதிர்க்கட்சியானது.

1952-இல் அமைக்கப்பட்ட சென்னை மாகாணத்தின் முதல் சட்டப்பேரவையில் காங்கிரஸ் சார்பில் 1954 வரை ராஜாஜியும், அதன்பின்னர் காமராஜரும் முதல்வராக இருந்தனர். 1957-இல் காமராஜர் தலைமையில் தேர்தலை சந்தித்தது காங்கிரஸ் கட்சி. 1952-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடாமல் இருந்த திமுக, இந்த தேர்தலில் முதன்முறையாக களம் கண்டது.

ஆந்திர மாநிலம், கேரளா, கர்நாடக மாநில பிரிவினைக்கு பிறகு சென்னை மாகாணத்தில் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகளின் செல்வாக்கு குறைந்து போனது. ராஜாஜி தலைமையிலான சீர்திருத்த காங்கிரஸ் என்ற கட்சி இந்தத் தேர்தலில் போட்டியிட்டது. இந்த தேர்தலில் காங்கிரஸ், திமுக, சீர்திருத்த காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் பிரதான கட்சிகளாக இருந்தன.

தேர்தல் திருவிழா – 1957

1952-இல் சென்னை மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 375, 1953-இல் ஆந்திரா பிரிந்து தனி மாநிலமாக உருவானது, பெல்லாரி மாவட்டம் மைசூர் மாநிலத்துடன் இணைந்தது. இதனால் சென்னை சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 231 ஆகக் குறைந்தது. பின்னர் நவம்பர் 1 1956 இல் மலபார் மாவட்டம் கேரளாவுடன் இணைக்கப்பட்டதால், உறுப்பினர் எண்ணிக்கை 190 ஆகக் குறைந்தது, மீண்டும் கேரளத்தின் தமிழ் பேசும் பகுதிகளான கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் செங்கோட்டை தாலுகா ஆகியவை சென்னை மாநிலத்தில் இணைந்தன. இதனால் உறுப்பினர் எண்ணிக்கை 205 ஆக உயர்ந்தது.

இந்த 205 இடங்களுக்கே 1957-இல் தேர்தல் நடத்தப்பட்டது, 167 தொகுதிகளிலிருந்து இந்த 205 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்போது இரட்டை உறுப்பினர் முறை வழக்கில் இருந்ததால் 38 தொகுதிகள் இரண்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றிருந்தன. இவற்றுள் 37 இடங்கள் பட்டியல் இனத்தவர்களும், 1 இடம் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டன.

காமராஜரே ஆட்சி அமைத்தார்:

1957-ஆம் ஆண்டு மார்ச் 31இல் நடந்த தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் 151 இடங்களில் தனிப்பெரும்பான்மையுடன் அமோகமாக வென்றது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக இல்லாததால் சுயேட்சையாக போட்டியிட்ட திமுக 13 இடங்களில் வென்றது, ராஜாஜியின் சீர்திருத்த காங்கிரஸ் 9 இடங்களில் வென்றது. 1952 தேர்தலில் சென்னை மாகாணத்தில் 62 இடங்களில் வென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த தேர்தலில் 4 இடங்களில் மட்டுமே வென்றது. பார்வார்டு பிளாக் 3, பிரஜா சோஷலிஸ்ட் கட்சி 2, சோஷலிஸ்ட் கட்சி 1, சுயேட்சைகள் 22 இடங்களில் வென்றனர்.

தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியின் சார்பில் காமராஜர் மீண்டும் முதல்வராக பதவியேற்றார். திமுக சார்பில் சுயேட்சையாக காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்ட சி.என்.அண்ணாதுரை சென்னை மாகாண சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரானார். இந்தத் தேர்தலில்தான் கலைஞர் கருணாநிதி குளித்தலை தொகுதியிலிருந்து வென்று முதன்முறையாக சட்டமன்றம் சென்றார்.

- வீரமணி சுந்தர சோழன்