டிரெண்டிங்

உண்ணாவிரதத்திற்கு முன்பு ‘டிபன்’ சாப்பிட்ட காங். தலைவர்கள் - வைரலாகும் போட்டோ

உண்ணாவிரதத்திற்கு முன்பு ‘டிபன்’ சாப்பிட்ட காங். தலைவர்கள் - வைரலாகும் போட்டோ

rajakannan

உண்ணாவிரதப் போராட்டத்திற்கு முன்பு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஹோட்டலில் டிபன் சாப்பிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தாத மத்திய அரசைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் இன்று நாடு முழுவதும் உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மறுசீராய்வு செய்யக் கோரியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது. டெல்லி ராஜ்கோட்டில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றார். காங்கிரஸ் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, ஷீலா தீட்சித், அஜய் மக்கான் உள்ளிட்டோரும் போராட்டத்தில் பங்கேற்றனர். 

இன்று காலை 10.30 மணிக்கு உண்ணாவிரத ஆர்ப்பாட்டம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்பு, காலை 8 மணிக்கே டெல்லியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர், ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டுள்ளனர். அஜய் மக்கான் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் உணவருந்தும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

கர்நாடகாவில் அமித்ஷா தவறுதலாக பேசிய வீடியோவை காங்கிரஸ் கட்சியினர் தீயாய் பரப்பினார்கள். அதேபோல் பாஜகவினரும் இந்தப் புகைப்படத்தை விட்டுவைக்கவில்லை. இந்த புகைப்படத்தை சுட்டிக்காட்டிய பாஜக தலைவர் ஹரிஸ் குர்னா, இது தான், காங்கிரஸ் கட்சியின் உண்ணாவிரத போராட்டம் என்று கிண்டல் செய்துள்ளார். ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் உண்ணாவிரதம் இன்று நிறைவடைந்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கியதைக் கண்டித்து பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் வரும் 12ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.