கடவுள் ராமர் இந்துக்களுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே சொந்தமானவர் என்று தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால், நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்க்காமல் அவசர சட்டம் மூலம் ராமர் கோயில் கட்டும் பணிகளை தொடங்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். விஷ்வ ஹிந்து பரிஷத், சிவசேனா உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர். நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகே அவசர சட்டம் குறித்து பரிசீலிக்க முடியும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்நிலையில், அயோத்தி சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஃபரூக் அப்துல்லா, “யாரும் கடவுள் ராமருக்கு பகையாக இருக்கமாட்டார்கள். இந்த பிரச்னையை தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ராமர் கோயிலை கட்ட வேண்டும். அந்தநாள் நடக்கும். அந்த கோயில் கட்டுவதற்காக நான் என்னுடைய பங்களிப்பை செலுத்துவேன்.
அயோத்தி பிரச்னையை எல்லோரும் உட்கார்ந்து பேசி தீர்க்க வேண்டும். ஏன் இந்த விஷயம் நீதிமன்றத்திற்கு சென்றது. பேச்சுவார்த்தை மூலம் இந்த விவகாரம் தீர்க்க முடியும் என்று நான் நம்புகிறேன். கடவுள் ராமர் இந்துக்களுக்கு மட்டும் சொந்தக்காரர் அல்ல. உலகத்துக்கே சொந்தமானர்” என்று கூறியுள்ளார்.