டிரெண்டிங்

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள்...

kaleelrahman

நீடாமங்கலம் அருகே மேல பூவனூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.


டெல்டா பகுதி முழுவதும் தற்போது குறுவை அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் 97 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர். 80 சதவீத குறுவை பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள 249 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீடாமங்கலம் அருகே மேல பூவனூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் தஞ்சை நீடாமங்கலம் சாலையில் மறியலில் ஈடுபடப்போவதாக தகவல் வெளியானது.


தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் மற்றும் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து விவசாயிகள் மறியலில் ஈடுபடாமல் கலைந்து சென்றனர்.