அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கில் முன் ஜாமின் கோரி போக்குவரத்துத்துறை முன்னாள் அமைச்சரும் டிடிவி தினகரன் ஆதரவாளருமான செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
போக்குவரத்து துறையில் வேலைவாங்கித் தருவதாக 16 பேரிடம் 95 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக போக்குவரத்து ஊழியர் கணேஷ் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார். அந்த வழக்கில், தனக்கு முன் ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி இன்று மனுதாக்கல் செய்தார்.
அதில், யாருக்கும் சிபாரிசு மூலம் பணிகள் வழங்கப்படுவதில்லை என்று செந்தில் பாலாஜி குறிப்பிட்டிருந்தார். மேலும், பணிநியமனம் தொடர்பான குழுவில் முடிவெடுப்பது போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்தான் என்றும் தெரிவித்துள்ளார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் தானும் ஒருவன் என்பதால் தன் மீது பழிவாங்கும் நடவடிக்கையாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
தன் மீது ஜாமினில் வெளிவரமுடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் முன் ஜாமின் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.