டிரெண்டிங்

ஆடு திருடர்களை தனி ஒருவராக மடக்கிப் பிடித்த விவசாயி..!

ஆடு திருடர்களை தனி ஒருவராக மடக்கிப் பிடித்த விவசாயி..!

kaleelrahman

அரியலூரில் தனி ஒருவராக ஆடு திருடர்களை பொறிவைத்து பிடித்த விவசாயி.... 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். 

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள முள்ளுக்குறிச்சி, ஆதனங்குறிச்சி, முதுகுளம், கோட்டைக்காடு, தளவாய் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களது விளை நிலங்களை சிமெண்ட் ஆலைகளுக்கு விற்பனை செய்துவிட்டு தற்போது ஆடு மற்றும் மாடுகளை வளர்த்து பிழைத்து வருகின்றனர்.

இந்நிலையில் அப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து ஆடுகள் திருடு போய் வந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாரிடம் புகார் செய்தபோது சம்பந்தப்பட்டவர்கள் யார் என்று தெரியவில்லை. நாங்கள் உரிய விசாரணை நடத்தி கண்டுபிடிக்கிறோம். மேலும் தங்களுக்கு ஏதேனும் தகவல் கிடைத்தால் தெரிவிக்க வேண்டுமென்று கூறி இருந்தனர். 


இதைத்தொடர்ந்து முள்ளுக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் என்ற விவசாயி 40 ஆடுகளை வளர்த்து வருகிறார். இவரது 4 ஆடுகள் ஏற்கெனவே திருடு போய் இருந்த நிலையில் திருடர்களை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் செல்வகுமார் தனது மனைவி செல்வியுடன் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் 3 இளைஞர்கள் மது அருந்தி கொண்டே ஆடுகளை நோட்டமிட்டனர். இதைக் கண்ட செல்வகுமார் இவர்களை கையும் களவுமாக பிடிக்க அந்த வாலிபர்களை நோட்டமிட்டார். 


அப்போது ஒரு இளைஞர் ஆடுகளை மடக்கி ஒரு செம்மறி ஆட்டுக் கிடாவை பிடித்து தூக்கிச் சென்றார். இதனைக் கண்ட செல்வராஜ் மாற்றுப்பாதையில் சென்று ஆட்டை தூக்கி சென்ற இளைஞரை கையும் களவுமாக பிடித்து கூச்சலிட்டார். இதனைக் கண்ட மற்ற 2 வாலிபர்களும் தப்பி ஓடிவிட்டனர்.

அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கம் இருந்தவர்கள் அந்த இளைஞரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் ஆட்டை திருட வந்த இளைஞர்கள் முதுகுளம் காலனி தெருவைச் சேர்ந்த சாமசிவம், அலெக்சாண்டர், மணிகண்டன் என்பது தெரியவந்தது. அதன் பின்னர் அவர்களை தளவாய் போலீசில் ஒப்படைத்தனர். அதைத்தொடர்ந்து தளவாய் போலீசார் தப்பியோடிய 2 பேரையும் பிடித்து 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.