டிரெண்டிங்

FACT CHECK: இந்த கூட்டம் லால் சிங் சத்தா-ஐ பார்க்க வந்ததா? - கொதித்தெழுந்த கேரளாட்டீஸ்!

JananiGovindhan

ஆஸ்கர் விருதுகளை வாங்கிக் குவித்த ஃபாரஸ்ட் கம்ப் படத்தின் இந்தி ரீமேக்காக உருவாகி வெளியாகியிருக்கிறது அமீர்கானின் லால் சிங் சத்தா. ஆனால் லால் சிங் சத்தாவின் படத்தை காண திரையரங்குக்கு வரும் ரசிகர்கள் கூட்டம் என்னவோ குறைவாகவே இருக்கிறது. மேலும் படத்துக்கும் கலவையான விமர்சனங்களே கிடைக்கப்பெற்றுள்ளன.

இருப்பினும் படத்தை எப்படியாவது ஓட வைத்துவிட வேண்டும் என்பதற்காக படத்தின் நாயகனையும், நாயகியையும் வைத்து பல மொழிகளிலும் ரிலீசுக்கு பிந்தைய புரோமோஷன்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

இப்படி இருக்கையில், தல்லுமாலா என்ற படத்தின் புரோமோஷன் வேலைகள் கேரளாவில் உள்ள மாலில் நடைபெற இருந்தது. இதற்காக அந்த படத்தின் நாயகனும் மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான டோவினோ தாமஸ் வருவதை அறிந்த ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் லூலு மாலில் குவிந்திருக்கிறார்கள்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அமீர் கானின் லால் சிங் சத்தா படத்தை காண்பதற்காகத்தான் உத்தர பிரதேசத்தில் உள்ள லூலு மாலில் மக்கள் கூட்டம் அலைமோதியிருக்கிறது என இணையவாசி ஒருவர் ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார்.

இந்த பதிவு போலியானது என்றும், இது நடந்தது கேரளாவில் என்றும் இணையவாசிகள் பலரும் அந்த பதிவில் கமெண்ட் செய்திருக்கிறார்கள். இதனிடையே ரசிகர்கள் கூட்டம் அதிகமானதால் கேரளாவில் உள்ள மாலில் நடைபெற இருந்த தல்லுமாலா படத்தின் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் எனவே, 'லால் சிங் சத்தா' படத்தை பார்க்க மக்கள் லக்னோவின் லூலு மாலுக்கு வருவதாகக் கூற கேரளாவில் நடந்த நிகழ்ச்சியின் வீடியோ பயன்படுத்தப்பட்டது என்பது தெளிவாகி இருக்கிறது.

முன்னதாக, தென்னிந்திய படங்களுக்கு இந்தியா முழுவதும் பெருவாரியான வரவேற்பு கிட்டிவரும் இதே வேளையில், இந்தியா சினிமாவின் கேட்வே என்றாலே அது பாலிவுட்தான் என்ற நிலை மாறியிருப்பது அண்மைக்காலங்களாக வெளியாகும் இந்தி படங்களுக்கு கிடைக்கும் வரவேற்புகளே சான்றாக இருக்கிறது என நெட்டிசன்களும், சினிமா ஆர்வலர்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.