நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதைப் பொறுத்து வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் நாட்களை நீட்டிப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை மேலூரில் ஒருபோக விசாயத்திற்கு நீர் திறந்துவிட வேண்டும் என்று மேலூர் விவசாயிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை - கன்னியாகுமாரி தேசிய நெடுஞ்சாலையில் காலை முதலே தொடங்கப்பட்ட இந்த போராட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தில் வைகை அணையில் இருந்து நீர் திறந்து விட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை எழுந்தது.
போராட்டம் பெரிதான நிலையில் சாகுபடிக்காக வைகை அணையில் இருந்து 900 கன அடி நீர் திறக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இன்று முதல் வரும் 27ஆம் தேதி வரை தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதைப் பொறுத்து வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் நாட்களை நீட்டிப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என முதலமைச்சர் உறுதியளிதிருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போது நீர்ப்பிடிப்பு பகுதியில் குறைவான அளவே மழை பெய்ததால் 7 நாட்களுக்கு மட்டும் தண்ணீர் திறந்துவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வது தொடர்ந்தால் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் நாட்கள் நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.