தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் மற்றும் தபால் வாக்குகளின் எண்ணிக்கை ஒரே நேரத்தில் காலை 8 மணிக்கே தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வேலூர் தவிர 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதுதவிர சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிராடம், திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளுக்கு கடந்த 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல்களில் பதிவான வாக்குகள் அனைத்தும் 45 மையங்களில் நாளை எண்ணப்படுகின்றன. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ விளக்கமளித்துள்ளார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும், தபால் வாக்குகளும் எண்ணும் பணி காலை 8 மணிக்கே தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாடாளுமன்ற தொகுதியில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் இருக்கும் நிலையில், ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கான மேஜையில், தபால் வாக்குகள் எண்ணப்படும். அங்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எட்டரை மணிக்கு தொடங்கப்படும். மீதமுள்ள 5 சட்டப்பேரவை தொகுதி மேஜைகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணிக்கே தொடங்கும்.
இடைத்தேர்தல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தொகுதிகளைப் பொறுத்தவரையில், முதலில் தபால் வாக்குகளும், எட்டரை மணி முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, தபால் வாக்குகள் எண்ணும் பணி நிறைவடையும் வரை காத்திருக்காமல், மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்படும். தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்போது, வெற்றி வாக்கு வித்தியாசம், தகுதிநீக்கம் செய்யப்பட்ட தபால் வாக்குகளைவிட குறைவாக இருந்தால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட தபால் வாக்குகள் தேர்தல் அலுவலரின் மறு சரிபார்ப்புக்கு உட்படுத்தப்படும்.
ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கையைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு சட்டப்பேரவைக்கும் 5 வாக்குச் சாவடிகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும். வாக்கு இயந்திரங்களின் எண், நாடாளுமன்ற சட்டப்பேரவை தொகுதியின் பெயர் மற்றும் எண், வாக்குப்பதிவு நடைபெற்ற நாள், வாக்குச்சாவடி மைய எண் ஆகிய விவரங்கள் அஞ்சல் அட்டை அளவிலான வெள்ளை நிற அட்டையில் அச்சிடப்பட்டு, ஒரு பெட்டியில் போடப்பட்டு குலுக்கல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது