தற்போது தனித்து நின்றாலும் 60 இடங்களில் வெற்றி பெறுவோம் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இந்த கூட்டம் இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் செல்வம் தலைமையில் நடைபெறுகிறது. சிறப்பு அழைப்பாளராக தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த முருகன், “மும்மொழி கொள்கையில் யாரும் அரசியல் செய்ய கூடாது. கட்சியில் யார் வேண்டுமானாலும் இணையலாம். அவர்கள் இணைந்த பிறகு எப்படி செயல்படுகிறார்கள் என்பது தான் முக்கியம். அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி உறவு சிறப்பாக உள்ளது. எங்களுக்குள் எந்த சிக்கலும் இல்லை.
நாங்கள் 60 இடங்களில் தற்போது தனித்து நின்றாலும் வெற்றி பெறுவோம். ராமரா, முருகனா என்பது முக்கியமல்ல. இருவரும் கடவுள் தான். முருகனின் கந்த சஷ்டி குறித்து அவதூறு பரப்பியதால் நாங்கள் போராடினோம். அந்த அவதூறு பரப்பிய கருப்பர் கூட்டம் பின்னனியில் தி.மு.க இருக்கிறதா என்பதை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் விளக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.