தமிழகம் எனும் அமைதியான குளத்தில் ஹெச்.ராஜா கல்லெறிந்துவிட்டதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியும் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், தமிழ்ச் சமுதாயம் தந்தைபெரியாரை கடவுள் மறுப்பாளராக மட்டும் பார்க்கவில்லை என்றும், அவர் சமூக மறுமலர்ச்சிக்காக பாடுபட்டவர், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் தன்னையே அர்ப்பணித்துக்கொண்டவர் என குறிப்பிட்டுள்ளனர். இந்தியாவில் மற்ற மாநிலங்கள் பல்வேறு பிரச்னைகளால் பற்றி எரிந்தபோது கூட தமிழகம் அமைதிப்பூங்காவாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
இந்த அமைதியான குளத்தில் ஹெச்.ராஜா கல்லெறிந்துவிட்டார் என்பது தான் தமிழக மக்களின் தீராதக் கோபம் என கூறியுள்ளனர். ஹெச்.ராஜா வருத்தம் தெரிவித்திருந்தாலும் தமிழக மக்களின் மனம் புண்பட்டு போயிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் தமிழகத்தில் எப்படியாவது குழப்பம் விளைவித்து, குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கலாம் என்று கருதுபவர்களின் எண்ணம் என்றைக்கும் பலிக்காது என்று இருவரும் கூறியுள்ளனர்.