டிரெண்டிங்

காவிரி பிரச்னையில் அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழக அரசு அழைப்பு

rajakannan

காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து வரும் 22ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து, சட்ட ஆலோசகர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னையில்‌ தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும், காவிரி நதிநீரைக் கொண்டு விவசாயம் செய்து வரும் வேளாண் மக்களின் நலனை பேணிக்காக்கவும் எடுக்கப்பட வேண்டிய மேல்நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 22ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்‌டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இக்கூட்டத்தில் அனைத்துக் கட்சி தலை‌வர்களுடன் கலந்து ஆலோசித்து, அவர்களின் கருத்துக்களைப் பெற்று அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றபிறகு முதன்முறையாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது. காவிரி விவகாரத்தில் வரும் 23ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என திமுக ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசியல் வரலாற்றில் அனைத்துக் கட்சி கூட்டங்கள் நடைபெறுவது மிகவும் அரிது. இதற்கு முன்பாக 2002-ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அரசு அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தியது.