அதிமுகவில் பிளவுபட்ட அணிகள் இன்று இணைவது உறுதியாகியுள்ள நிலையில், முதலமைச்சர் பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இன்று கூட்டாக 12 மணிக்கு செய்தியாளர்களை சந்திப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாளாக இழுபறியிலிருந்த அதிமுக அணிகள் இணைப்பு விவகாரம் இன்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று 12 மணியளவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் அணிகள் இணைப்பிற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த தகவலை இருவரும் சேர்ந்தபடி அறிவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து பொதுக்குழுவைக் கூட்டி கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வந்து சசிகலாவை நீக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் 12 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகம் சென்று முதலமைச்சர் பழனிசாமியை சந்திக்கவுள்ளதாகவும் அதன் பின் இந்த அறிவிப்புகள் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழாவும் இன்றே நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மும்பையில் பல்வேறு நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மதியம் சென்னை வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.