டிரெண்டிங்

ஜெயலலிதா காலத்தில் இருந்ததுபோல ராணுவக்கட்டுப்பாட்டுடன் இருங்கள்: ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டறிக்கை

ஜெயலலிதா காலத்தில் இருந்ததுபோல ராணுவக்கட்டுப்பாட்டுடன் இருங்கள்: ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டறிக்கை

webteam

கட்சி நிர்வாகிகள் தலைமை ஒப்புதல் இல்லாமல் எவ்வித கருத்தும் தெரிவிக்கக்கூடாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாம் அனைவரும் ஒருதாய் மக்கள். தமிழக மக்களுக்கு நாம் ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் ஏராளமாக உள்ளன. அதை நோக்கிய பயணத்தில் நாம் கவனமாக செயல்பட வேண்டிய நேரமிது. இனிவரும் காலங்களிலும் சிறப்புற ஆட்சி நடத்தி மீண்டும் ஒரு தொடர் வெற்றியை பெற நாம் ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய நேரமிது.

கடந்த சில நாட்களாக கழக நிர்வாகிகளில் சிலர் எந்த பின்னணியும் இன்றி கூறிய சில கருத்துக்கள் மாற்றாருவருக்கு பெரும் விவாதப்பொருள் ஆகிவிட்டன. அத்தகைய சூழல் மீண்டும் ஏற்படா வண்ணம் ஜெயலலிதா காலத்தில் இருந்தது போலவே ராணுவக்கட்டுப்பாட்டுடன் தலைமையின் முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும். கட்சியின் அனைத்து முக்கிய கொள்கை முடிவுகளையும், கூட்டணி குறித்த நிலைப்பாடுகளையும், ஜெயலலிதா காட்டிய வழியில், ஜனநாயக ரீதியில் கழகத்தின் தலைமை விரிவாக ஆலோசித்து கழகத் தொண்டர்களின் மன உணர்வுகளை எதிரொலிக்கும் வகையில் சிறப்பான முடிவு மேற்கொள்ளப்படும்.

சிறு சலசலப்புகளுக்கு இடம் தராமல், நம்மை வீழ்த்த நினைப்போரின் பேராசைகளுக்கு வாய்ப்பளிக்காமல், ஒன்றுபட்டு உழைத்திட உங்களையெல்லாம் அன்போடு கேட்டுக்கொள்கிறோம். மக்கள் பணிகளிலும், கழகப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்துங்கள். உங்களின் தனிப்பட்ட கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கருத்துப் பரிமாற்றங்கள் செய்வதன் மூலம் நாம் எதையும் சாதிக்கப் போவதில்லை. அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை மட்டுமே முன் வையுங்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.