வங்கிகளில், தனிநபர் மற்றும் நிறுவனங்கள் பெற்ற கடனுக்கான தவணைத் தொகையை (இஎம்ஐ) செலுத்துவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் முடிகிறது.
கடன் தவணை சலுகையை நீட்டிக்கக்கூடாது என ஹெச்.டி.எப்.சி., கோட்டக் மகேந்திரா உள்ளிட்ட உள்ளிட்ட வங்கிகள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதால், இதற்குமேல் இஎம்ஐ செலுத்தும் கால அவகாசம், நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்று வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் செப்டம்பர் முதல் எல்லோரும் இஎம்ஐ கட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
கொரோனா பாதிப்பால் வேலை இழந்தவர்களும், சம்பளக் குறைப்புக்கு ஆளாகியிருப்போரும் தொழில் முடங்கிப் போயிருக்கும் நிறுவனங்களும் குறிப்பாக, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் எப்படி இஎம்ஐ கட்டுவது என்று புலம்பித் தவிக்கின்றனர்.
முன்னதாக கடந்த மார்ச் மாதம் வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள், தாங்கள் வழங்கிய கடன்களுக்கான தவணைகளை வசூலிப்பதில் இருந்து 3 மாதங்கள் வரை கால அவகாசம் வழங்க ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது.
பின்னர் மீண்டும் 3 மாதங்களுக்கு நீட்டித்து ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டது. இதன்படி. தனிநபர் கடன்கள், கல்விக் கடன்கள், வீட்டுக் கடன்கள், விவசாய கடன்கள், வாகன கடன்கள் உள்ளிட்ட கடன்களுக்கு மக்கள் இஎம்ஐ கட்டாமல் மொரோட்டோரியம் (Moratorium ) என்று சொல்லப்படும் கடன் தவணை சலுகையை பயன்படுத்தினர்.
இந்நிலையில் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்ட அந்த சலுகை இன்றுடன் முடிகிறது. இதனால் நாளை முதல் வழக்கம்போல் வங்கிகள் இஎம்ஐ வசூலிக்க முடிவு செய்துள்ளன. பெரும்பாலான வங்கிகள் மாதத்தின் முதல் வாரத்தில் இஎம்ஐ பணத்தை ஆட்டோ டெபிட் முறையில் வசூலிக்கும். ஆனால் பணம் இல்லாமல் இருக்கும் மக்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
ஏனெனில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் தொழிற்துறைகள், நிறுவனங்கள் இன்னும் முழு அளவில் இயங்கவில்லை என்பதே கள யதார்த்தம். மேலும் கொரோனாவால் பல்வேறு தரப்பினரின் வாழ்வாதாரம் பறிபோய் உள்ளது. எனவே இந்த தவணை சலுகை மீண்டும் நீட்டிக்கப்படுமா என தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.